சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டார். மிக எளிதான இலக்கை கூட எட்ட முடியாததே அதற்கு காரணம்.
அத்துடன் 6வது போட்டியில் விளையாடிய மும்பை அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும். இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், எத்தகைய ஆடுகளமாக இருந்தாலும், 118 ரன்கள் என்பதை நாங்கள் ‘சேஸ்’ செய்திருக்க வேண்டும்.
இதனால் ஆடுகளத்தை குற்றம்சாட்டுவது சரியாக இருக்காது. எங்களை நாங்களே வசைபாடி கொள்ள வேண்டியதுதான்.
நாங்கள் பந்து வீசிய விதம் மகிழ்ச்சியளித்தது. ஆனால் மீண்டும் ஒரு முறை பேட்ஸ்மேன்கள் கைவிட்டு விட்டனர்.
நிறைய விஷயங்களை நான் பேச முடியும். ஆனால் தற்போது தவறுகளை சுட்டிக்காட்ட விரும்பவில்லை.
மிகவும் சிறப்பாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். சரியான ஏரியாக்களில் அவர்கள் பந்து வீசினர்.
அவர்கள் எங்களை சிந்தனையிலேயே இருக்க வைத்து விட்டனர். எங்களால் மீண்டு வர முடியவில்லை.
நான் உள்பட எங்கள் அணியின் சில வீரர்கள் மோசமான ஷாட்களை விளையாடினோம். ஷாட் தேர்வு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.