ஒரு தனிப்பட்ட மனிதன் தமிழரசுக் கட்சியை அழிப்பதற்கு கட்சியிலுள்ள ஏனையோர் அனுமதிப்பார்களாக இருந்தால், சிங்கள பகுதிகளில் நீண்டகால வரலாற்றை கொண்டு தற்போது அழிந்து போன கட்சிகளை போல தமிழரசுக்கட்சியும் தடம் தெரியாமல் அழிந்து போகும் சூழலுக்கு இட்டுசெல்லப்படும் என கனடாவில் (Canada) இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் (Nehru Gunaratnam) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த பத்து ஆண்டுகளில் கழுதை எவ்வாறு கட்டெறும்பானது ? இது சுமந்திரன் (M.A.Sumanthiran) என்ற தனிப்பட்ட நபரால் மாத்திரமே.
ஆபத்தான கட்டம்
சுமந்திரனின் செயற்பாடென்பது தனிப்பட்ட நபரை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சமூகத்தையே பெரிதளவில் பாதிக்கின்றது.
தமிழரசுக்கட்சியில் தனக்கு எதிராக பேசுபவர்களை மாற்றி தனக்காக பேசுபவர்களை மாத்திரம் வைத்துகொண்டு கட்சியை தன்வசம் மாற்றிக்கொண்டிருக்கின்றார்.
தமிழரசுக்கட்சி பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது, நாம் எவ்வளவு ஆபத்தான கட்டத்திற்கு கொண்டு வந்து விடப்பட்டுள்ளளோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.