அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் புதன்கிழமை (03) ஆரம்பமான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்றிடிக்கு ஒய்வு வழங்க எடுத்த முடிவு குறித்து பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் விற்பன்னர்களான வசிம் அக்ரமும் வக்கார் யூனிஸும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
‘இந்த முடிவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க ஷஹீனின் முடிவு’ என கூறிய வசிம் அக்ரம், வீரர்களை எச்சரிக்கத் தவறவில்லை.
என்ன வகை கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனும்போது ‘நீங்கள் விளையாட்டில் சிறந்தவராக இருக்க விரும்புகிறீரர்களா அல்லது கோடீஸ்வரராக இருக்க விரும்புகிறீர்களா?’ என அவர் கேள்வி எழுப்பினார்.
‘சிட்னி டெஸ்ட் போட்டி முடிவடைந்த சூட்டோடு நியூசிலாந்தில் ஐந்து ரி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன, அந்தத் தொடருக்கு ஷஹீன் ஷா அப்றிடிதான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்’ என ஃபொக்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சிக்கு வசிம் கூறினார்.
‘ஆனால் ரி20 கிரிக்கெட்டைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? என்பது எனக்கு புரிகிறது, ஏனெனில் அந்த வகை கிரிக்கெட் பொழுதுபோக்கிற்காக விளையாடுப்படுவதுடன் கிரிக்கெட் சபைகளுக்கும் வீரர்களுக்கும் கொழுத்த வருவாயாக இருக்கிறது, ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்தான் முக்கியம் என்பதை கிரிக்கெட் வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
‘இருபது வருடங்களுக்கு முன்னர் சிட்னி டெஸ்டில் நடந்ததைப் பற்றி பேசினால் அது அப்படியே நினைவில் இருக்கும். ஆனால், ரி20யில் முந்திய (நேற்று) இரவு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதுதான் வித்தியாசம். நீங்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டுமா அல்லது கோடீஸ்வரராக வேண்டுமா என்பது குறித்து இவர்கள் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள வேண்டும். சிறந்த வீரர், கோடீஸ்வரர் ஆகிய இரண்டிலும் உங்களால் உயர முடியும். ஆனால் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை’ என்றார் வசிம் அக்ரம்.
அஃப்ரிடி இல்லாதது ‘என்னை சிரிக்க வைத்தது’ என வக்கார் ஆச்சரியத்துடன் கூறினார்.
‘முந்தைய டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி இருந்ததால் அவர் இந்தப் போட்டியில் விளையாடுவார் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் இல்லாதது எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் பழைய ஷஹீன் அப்ரிடியைப் போல உணரத் தொடங்கினார், மேலும் அவர் பந்தை பக்கவாரியாக (swing) நகரச் செய்தார். அத்துடன் அவரது பந்துவீச்சில் வேகமும் நன்றாக இருந்தது’ என வக்கார் யூனிஸ் குறிப்பிட்டார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அப்ரிடி அளவுக்கு அதிகமாக பந்துவீசியது பாகிஸ்தானுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருந்தது. அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் ஒரு பலவீனமான, அனுபவமற்ற வேகப்பந்துவீச்சு வரிசையை வழிநடத்திய அவர் 100 ஓவர்களுக்கு நான்கு பந்துகள் குறைவாக அதாவது 99.2 ஓவர்கள் வீசியிருந்தார்.
இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அதிகமாக பந்துவீசிய இரண்டாவது பந்துவீச்சாளரான நாதன் லயனை விட சற்று அதிகமாக ஷஹீன் பந்துவீசியருந்தார்.
சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் அரங்கில் அவர் அதிக பொறுப்பை ஏற்றதால் பெரும்பாலான காலப்பகுதியில் அது அவருக்கு ஒரு சிக்கலாக மாறியது.
அவர் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் லாகூர் காலண்டர்ஸ் அணித் தலைவராக உள்ளார. அத்துடன் சர்வதேச லீக் ரி20 கிரிக்கெட்டிலும் மூன்று வருட ஒப்பந்தத்தில் கடந்த வருடம் கைச்சாத்திட்டார்.
இப்போது பாகிஸ்தான் ரி20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவர், இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரை எதிர்கொள்ளவுள்ளார்.
இது இவ்வாறிருக்க, டெஸ்ட் கிரிக்கெட் அணியிலிருந்து தானாக விலகிக்கொண்ட ஹரிஸ் ரவூப், பிக் பாஷ் லீக்கில் மெல்பர்ன் ஸ்டார்ஸுக்காக விளையாடுவதை தேர்வு செய்துகொண்டார்.