சிட்டி புட்போல் லீக் ஏற்பாடு செய்துள்ள சிட்டி லீக் தலைவர் கிண்ண காலப்தாட்ட சுற்றுப் போட்டியில் இரண்டு போட்டிகள் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளன.
அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சம்பியன் சோண்டர்ஸ் அணியை முதலாம் பிரிவில் சம்பியனாகி தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ள மாளிகாவத்தை யூத் அணி எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி சிட்டி லீக் மைதானத்தில் சனிக்கிழமை (01) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளை தனி ஒரு வீரர் தவறவிட்டதால் மொரகஸ்முல்லை அணியிடம் தோல்வி அடைந்த மாளிகாவத்தை யூத் இன்றைய போட்டியில் அந்தத் தோல்வியை நிவிர்த்தி செய்ய முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறத்தில் 2 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட சோண்டர்ஸ் அணி, முதலாவது வெற்றியை ஈட்டுவதற்கு கடுமையாக முயற்சிக்கவுள்ளது.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ள போட்டியில் ஜாவா லேன் – மொரகஸ்முல்லை அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளன.
ஒரு வெற்றி, வெற்றிதோல்வியற்ற முடிவு ஆகிய பெறுபேறுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கும் மொரகஸ்முல்லை அணி தனது வெற்றியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இப் போட்டி தனது சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் ஜாவா லேன் இப் போட்டியை இலகுவில் நழுவ விடப்போவதில்லை.
சோண்டர்ஸுக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் கடைசிக் கட்டம் வரை 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்த ஜாவா லேன், கடைசி நிமிடத்தில் தாரைவார்த்த பெனால்டி காரணமாக ஆட்டத்தை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
இந்தப் போட்டியில் என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெற ஜாவா லேன் முயற்சிக்கவுள்ளது.
2ஆம் கட்டம்வரை அணிகள் நிலை
அணிகள் போ வெ ச தோ பெ கொ பு
மொரகஸ்முல்லை 2 1 1 0 3 1 4
சோண்டர்ஸ் 2 0 2 0 2 2 2
கலம்போ எவ்.சி. 2 0 2 0 1 1 2
ஜாவா லேன் 1 0 1 0 2 2 1
மாளிகாவத்தை யூத் 1 0 0 1 0 2 0
(குறிப்பு: போ: போட்டிகள், வெ: வெற்றி, ச: வெற்றிதோல்வி இல்லை, தோ: தோல்வி, பெ: பெற்ற கோல்கள், கொ: கொடுத்த கோல்கள், பு: புள்ளிகள்)