தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்களப் படைப்பாளிகளை கொண்டாடினார்கள் என்று தெரிவித்த ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் புலிகள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல என்பதை தலைவர் பிரபாகரன் அழுத்தமாக எடுத்தியம்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கவிஞர் தீபச்செல்வன் எழுதிய ”பதுங்குகுழியில் பிறந்த குழந்தை” என்ற கவிதை நூல் அனுஷா சிவலிங்கத்தால் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
குறித்த நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (30) கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டது.
தமிழ் மக்களின் விடுதலை
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்களப் படைப்பாளிகளைக் கொண்டாடியவர்கள் என்றும் சமாதான காலத்தில் தமிழர் பகுதியில் இடம்பெற்ற மானுடத்தின் ஒன்றுகூடலில் பெருமளவு சிங்கள படைப்பாளிகள் கலந்துகொண்டனர் என்றும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிப் போராளிகள் ஈழ மக்களில் இருந்து பிறிதானவர்களல்ல என்றும் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் சுதந்திரத்திற்குமாக எங்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும் இருந்து புறப்பட்டவர்கள் என்று கூறியதுடன், புலிகள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தலைவர் பிரபாகரன் கூறியிருப்பதாகவும் நினைவுபடுத்தினார்.
விடுதலைப் புலிகளை அழிக்காமல் அவர்கள் கோரிய அரசியல் தீர்வை முன்வைத்து புலிகள் என்ற பேராளுமை இயக்கத்தை அணைத்துச் சென்றிருந்தால் இலங்கையும் நிலவில் கால் பதித்திருக்க முடியும் என்று கூறிய அவர், இலங்கையில் சம அந்தஸ்து கொண்ட இரு தேசங்கள் மலர்ந்தால் உலகளவில் மிளிர முடியும் என்று அரசியல் ஆலோசர் அன்ரன் பாலசிங்கம் கூறியதையும் நினைவுபடுத்தினார்.
சிங்கள மக்களும் படைப்பாளிகளும்
சிங்களப் படைப்பாளிகள் மனசாட்சியில் தான் ஈழத் தமிழ் மக்களின் விடுதலை தங்கியுள்ளதாக தெரிவித்த தீபச்செல்வன் ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் உரிமையுடனும் வாழ்ந்தால்தான் இலங்கைத் தீவு நெருக்கடிகள் இன்றி இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
குறித்த நிகழ்வில் சிங்கள படைப்பாளிகள், கல்வியியலாளர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கவிதை நூல் குறித்தும் ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்தும் பேசியிருந்தனர். அத்துடன் குறித்த கவிதை நூலில் இருந்து சில கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டன.
இந்நூல் வெளியீட்டு விழாவில் பெருமளவான சிங்கள மக்களும் படைப்பாளிகளும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.