சிங்கப் பெண்ணே- விமர்சனம்
தயாரிப்பு : ஜே எஸ் பி பிலிம் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : ஷில்பா மஞ்சுநாத், ஆர்த்தி, ஏ. வெங்கடேஷ், பிரேம், எம். என். தீபக் நம்பியார், சென்ராயன், மாதவி லதா, சமுத்திரக்கனி மற்றும் பலர்
இயக்கம் : ஜே எஸ் பி சதீஷ்
மதிப்பீடு : 2/5
மார்ச் 8 என்பது சர்வதேச பெண்கள் தினம் என்பதால் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ‘சிங்கப் பெண்ணே’ என்ற படமும் ஒன்று. குறைந்த முதலீட்டில் ட்ரையத்லான் எனும் விளையாட்டுப் போட்டியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
படத்தின் நாயகியான ஷில்பா மஞ்சுநாத் கதையின் தொடக்கத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்பிக்கும் பயிற்சியாளராக அறிமுகமாகிறார். ஊரில் இருக்கும் அவரது தந்தை தொலைபேசி மூலம், ‘தாயின் உடல்நிலை சரியில்லை. விரைந்து வரவும்’ என தகவல் கொடுக்கிறார். பதறி அடித்துக் கொண்டு ஷில்பா மஞ்சுநாத் தன் பிறந்த மண்ணிற்கு செல்கிறார். ஆனால் அங்கு தந்தை அவளுக்கு பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஷில்பா மஞ்சுநாத். ஏன் என்பதற்கான காரணத்தை பிளாஷ்பேக் மூலம் இயக்குநர் விவரித்திருக்கிறார் இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் சிறிய வயதில் சாதனை படைக்க கூடிய திறமை வாய்ந்த ஆர்த்தி என்ற பெண்ணை சந்திக்கிறார். அவரது வேகம், நீச்சல் திறன் ஆகியவற்றை நேரில் பார்த்து வியக்கும் ஷில்பா மஞ்சுநாத்.. அவருக்கு நீச்சலை கற்பித்து தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை பெற பயிற்சி அளிக்கிறார். ஆனால் அரசு இயந்திரமும், அதிகார வர்க்கத்தின் குறுக்கீடு காரணமாக அந்த கிராமத்து பெண்ணின் கனவு உடைக்கப்படுகிறது. அதன் பிறகு நீச்சல் பயிற்சியாளரான ஷில்பா மஞ்சுநாத்தின் உதவியுடன் நீச்சலைக் கற்றுக்கொண்ட மாணவி ஆர்த்தி எப்படி சாதனையாளராக உருவாகிறார் என்பதுதான் படத்தின் கதை.
நீச்சல்+ சைக்கிளிங்+ ஓட்டம் ஆகிய மூன்று விளையாட்டுகளையும் ஒன்றிணைக்கும் ட்ரையத்தலான் என்ற விளையாட்டுப் போட்டியை மையப்படுத்தி இதுவரை தமிழில் திரைப்படங்கள் வெளியாகவில்லை. ட்ரையத்லான் வீராங்கனையாக நடித்திருக்கும் ஆர்த்தி… நிஜத்திலும் இந்திய அளவிலான சாம்பியன் என்பதால், அனாசயமாக நடித்து விளையாட்டு வீராங்கனையின் உணர்வுகளை எளிதாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.
இதுபோன்ற கதைகளில், திரைக்கதையையும், காட்சி அமைப்பையும், காட்சி கோர்வையையும் ரசிகர்களின் யூகத்திற்கு இடமளிக்காமல் நகர்த்திக் கொண்டு செல்வது என்பது படைப்பாளிகளுக்கு சவாலான காரியம். ஆனால் இவ்விடயத்தில் அறிமுக இயக்குநரான ஜே எஸ் பி சதீஷ் வெற்றி பெற்றிருக்கிறார். நீச்சல் குளம் தொடர்பான காட்சிகளில் ஒளிப்பதிவாளரும், பின்னணி இசையமைப்பாளரும் இயக்குநருக்கு கரம் கொடுத்து உதவி செய்திருக்கிறார்கள்.
பெண்கள் எல்லாத் துறையிலும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கு சமாதானம் சொல்லியும், பயிற்சி பெறும் போது உடன் இருக்கும் பயிற்சியாளர்களாலும் விளையாட்டுத்துறை அதிகாரிகளாலும் அத்து மீறும் போது எதிர்ப்பை தெரிவித்தும், தங்களுடைய கனவை நினைவாக்கவும்.. திறமையை வெளிப்படுத்தவும்.. போராடும் போராட்டத்தை இப்படம் துல்லியமாக காட்சிப்படுத்தி இருப்பதால் பெண்ணியத்தை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் சிறந்த படம். அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களுக்கு விருப்பமான துறையில் சாதிக்கத் தூண்டும் சிறந்த மோட்டிவேஷனல் படைப்பாகவும் இப்படம் அமைந்துள்ளது.
வில்லனாக நடித்திருக்கும் மறைந்த நடிகர் எம். என். நம்பியாரின் வாரிசான தீபக் நம்பியாரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. பாடல்களை விட பின்னணி இசையில் டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணியின் வாரிசான குமரன் சிவமணி தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்.
சமுத்திரக்கனி கௌரவ வேடத்தில் தோன்றி, ஊக்கமளிக்கும் வசனங்களை பேசுவதும் ரசிக்க வைக்கிறது.
சிங்க பெண்ணே- வெண்கல பதக்கம்