தொங்கு சபைகளில் கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைப்பது என்ற கொள்கை நிலைப்பாட்டைக் குழப்பி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாநகர சபையின் மேயர் பதவிக்கு தனது கட்சி சார்பில் யாரையாவது முன்மொழிந்தால், சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் பதவிக்கு கூட்டமைப்பும் பெயரை முன்மொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றுள்ளது. கூட்டமைப்பே கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக உள்ளது. இந்த நிலையில், மாநகர சபைக்கு மேயர் பதவிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பெயர் முன்மொழியப்பட்டால், சாவகச்சேரி நகர சபையில் முன்னணி கூடிய ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், அந்தச் சபைக்கு கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் ஒருவரை பிரேரிப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருமதி சிவமங்கை இராமநாதன் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்படுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் முன்னணி எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே சாவகச்சேரி நகர சபையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.