நடிகர் ரஜினி வருகிற விரைவில் ரசிகர்களை சந்திக்க உள்ளார். எந்த தேதியில் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார், ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக கருதப்படும் ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 26ம் தேஇ முதல் 31ம் தேதி வரை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார். தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில், ரஜினிகாந்த் இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று பலரும் அடித்து சொல்லிவரும் நிலையில் இந்த சந்திப்பு எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த மே மாதத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, அரசியல் குறித்த கேள்விக்கு, நிச்சயம் களத்திற்கு வருவேன் ஆனால், அதற்கான நேரம் இதுவல்ல; போர் வரும்போது பார்த்துக்கொள்ளாலாம் என்று அறிவித்து இருந்தார். அப்போது 15 மாவட்ட ரசிகர்களை மட்டுமே சந்தித்த ரஜினி பிறகு காலா, 2.0 படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்டதால் மற்ற மாவட்ட ரசிகர்களை சந்திக்க இயலவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
மேலும், கடந்த டிசம்பர் 12ம் தேதி தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பார், அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ஏராளமானோர் அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன்பும், ராகவேந்திரா திருமண மண்டபம் முன்பும் அவரை எதிர்பார்த்து பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தினர். இறுதி வரை ரஜினி சந்திக்க வராததாலும், எந்த அறிவிப்பையும் வெளியிடாததாலும் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் 26ம் தேதி முதல், ரசிகர்களை சந்திக்கிறார் என்கிற தகவல் வெளியானதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கிறார்கள். தற்போது எந்த தேதியில் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார், ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்க இருக்கும் இந்த சந்திப்பில், தினமும் 1000 ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி 26ம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களையும், 27ம் தேதி நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ரசிகர்களையும், 28ம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்களையும் சந்திக்க உள்ளார். மேலும், 29ம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்களையும், 30 மற்றும் 31ம் தேதி ஆகிய இரு நாட்களிலும் வடசென்னை, மத்திய மற்றும் தென் சென்னை ரசிகர்களையும் சந்திக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், இந்த சந்திப்பிற்காக ரஜினி ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ரஜினி அருகில் செல்லும் ரசிகர்கள் யாரும் அவருக்கு சால்வையோ, மாலையோ அணிவிக்கக்கூடாது, ரஜினி தோள் மீது கை போட கூடாது, அவர் கை பிடித்து குலுக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளன. இந்த சந்திப்பில் ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை நிச்சயம் வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.