சாலையில் பச்சை விளக்கு எரிந்தும் வாகனத்தை எடுக்காத ஓட்டுனர்: நிகழ்ந்த விபரீத சம்பவம்
பிரான்ஸ் நாட்டில் உள்ள சாலை ஒன்றில் பச்சை விளக்கு எரிந்த பிறகும் வாகனத்தை எடுக்காத கார் ஓட்டுனர் ஒருவரை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் Fontainebleau என்ற ஒரு பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள சாலை ஒன்றில் 40 வயதான நபர் ஒருவர் தனது ரெனால்ட் காரில் சில தினங்களுக்கு முன்னர் தனியாக பயணம் செய்துள்ளார்.
அப்போது, சாலையின் ஒரு இடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் அவர் தனது காரின் என்ஜினை நிறுத்தி விட்டு காத்திருந்துள்ளார்.
நபரின் காருக்கு பின்னார் மெர்ஸிடஸ் கார் ஒன்று நின்றுள்ளது. சில வினாடிகளுக்கு பிறகு பச்சை விளக்கு எரிந்ததும் அனைவரும் வாகனங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளனர்.
ஆனால், ரெனால்ட் காரில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் காரை எடுக்க முடியாமல் ஓட்டுனர் திணறியுள்ளார்.
அப்போது, பின்னால் நின்றுருந்த மெர்ஸிடஸ் காரில் இருந்த ஓட்டுனர் ஹாரன் ஒலியை விடாமல் எழுப்பியுள்ளார்.
ஆனால், ரெனால்ட் கார் சிறிதும் அசையவில்லை. மேலும், ஓட்டுனர் காரை விட்டு கீழ் இறங்கி சென்று மெர்ஸிடஸ் கார் ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் தனது காருக்கு திரும்பி எடுக்க முயன்றுள்ளார்.
துரதிஷ்டவசமாக இந்த சூழலிலும் காரை அவரால் எடுக்க முடியவில்லை.
பொறுமையை இழந்த மெர்ஸிடஸ் கார் ஓட்டுனர் பக்கவாட்டு பகுதியில் காரை திருப்பி எடுத்துக்கொண்டு ரெனால்ட் கார் முன்னால் வந்து நின்றுள்ளார்.
அப்போது, அந்த காரில் இருந்து இறங்கிய 3 இளைஞர்கள் கிரிக்கெட் மட்டைகளை எடுத்துச் சென்று ரெனால்ட் காரின் ஓட்டுனரை பிடித்து வெளியே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இளைஞர்களில் ஒருவர் ரெனால்ட் காரின் சாவியை எடுத்து தூர வீசியுள்ளார். சில நிமிடங்களாக தாக்கிய இளைஞர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிடுகின்றனர்.
கடும் போராட்டத்திற்கு பின்னர் சாவியை கண்டுபிடித்த ஓட்டுனர் காரை சரி செய்து ஓட்டிச்சென்று மருத்துவமனையில் அவராகவே அனுமதியாகியுள்ளார்.
நபருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருந்ததால், அவர் 30 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு தினங்களுக்கு பின்னர் அவர் பொலிசாரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து 3 இளைஞர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.