சானியா மிர்சாவின் அதிரடி சாதனை
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் பல்வேறு சர்வதேச சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேமிலி சர்க்கிள் கிண்ணம் தொடரில், மார்ட்டினா ஹிங்சுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் (மகளிர் இரட்டையர்) முதலிடத்திற்கு முன்னேறினார் சானியா. அத்துடன், நம்பர்-1 இடத்திற்கு வரும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
அதன்பின்னர் தொடர்ச்சியாக பல வெற்றிகளைக் குவித்த அவர், நம்பர்-1 இடத்தைத் தக்க வைத்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்ததன் மூலம், 80 வாரங்களாக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுக்கும் தன்னை பின்தொடர்பவர்களுக்கும் டுவிட்டர் மூலம் அவர் ஷேர் செய்துள்ளார்.
உலக அளவில் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர்கள் பட்டியலில் சானியா மிர்சா தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.
முதல் மூன்று இடங்களில் மார்ட்டினா நவரத்திலோவா (181 வாரங்கள்), காரா பிளாக் (145 வாரங்கள்) மற்றும் லிசேல் ஹூபர் (134 வாரங்கள்) ஆகியோர் உள்ளனர்.
29 வயதான சானியா மிர்சா, 3 கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட 40 இரட்டையர் பட்டங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.