கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சார தடை அமுல்படுத்தப்படமாட்டாது.
பரீட்சாத்திகளுக்கும், பரீட்சை கடமைகளில் ஈடுப்படுபவர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் -19 பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தேசிய பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்துவது சவால்மிக்கதொரு செயற்பாடாக காணப்படுகிறது.
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இன்று முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக தடையை அமுல்படுத்தாமலிருக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதை தொடர்ந்து குறித்த காலப்பகுதியில் மின்விநியோக தடையினை அமுல்படுத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீட்சாத்திகளின் நலனை கருத்திற்கொண்டு மாலை 06.30 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் எக்காரணிகளுக்காகவும் மின்விநியோக தடையை அமுல்படுத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்விநியோக தடை அமுல்படுத்தாமலிருக்கும் போது மின்னுற்பத்தியில் சமநிலை தன்மையை பேணுவதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் நீர்மின்னுற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நீரை விநியோகிக்க நீர் முகாமைத்துவ திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் திருத்த பணிகளும் நிறைவு பெற்றுள்ளதால் அதனூடாக 270 மெகாவாட் மின் தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பிற்கு இணைத்துக்கொள்ளப்படும்.
அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பாதிக்கப்பட்ட மக்கள் வீதி;க்கிறங்கி போராடுகிறார்கள்.
பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் பொது போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டால் அது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் பரீட்சாத்திகளுக்கும், பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுவதை பொது மக்கள் தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கும் உரிமை எமக்கு கிடையாது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இந்த கோரிக்கையை பொது மக்களிடம் முன்வைக்கிறோம் என்றார்.