கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. நாளை மறுதினம் (23) முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்லும் அதிகாரிகள், மாணவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமரின் செயலாளர் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரிடம் உரிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சீரற்ற காலநிலை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
பரீட்சத்திகளின் நலனைக் கருத்திற் கொண்டு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் என்பன உறுதியளித்துள்ளன.
அதேபோன்று அலுவலக நேர புகையிரதங்களுக்கு மேலதிகமாக காலை வேலைகளில் மேலதிக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது என்றார்.