சாணக்கிய தலைமைத்துவத்தின் அடையாளமாய் இராசநாயகம் ஐயா திகழ்கின்றார் .
பூர்வீக வரலாற்று மண்ணாகிய பூநகரியில் பிறந்து கிளிநொச்சி மண்ணின் பல்துறை ஆளுமையின் அடையாளமாக திகழ்ந்த உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்கள் சிவ பதப்பேறு பெற்றமை அறிந்து ஆழ்ந்த துயருற்றோம்.
ஐயாவின் வாழ்வு முழுமையும் கிளிநொச்சி மாவட்ட வளர்ச்சியோடும் வரலாற்றோடும் பிணைந்து இருந்தது. வயற்புலப்பண்பாண்டின் அடித்தளத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட கிளிநொச்சியின் பல்துறைசார் வளர்ச்சியில் இராசநாயகம் ஐயாவின் பங்கும் பணியும் அளப்பரியது.
‘அர்ப்பணித்தல்’ என்னும் உயரிய தத்துவத்தை தனது வாழ்வியல் முழுவதும் வெளிப்படுத்தி வாழ்ந்த உத்தமர் அவர். அவரது வளர்ச்சிப்பாதையின் ஒவ்வொரு தடங்களிலும் அவர் எதிர் கொண்ட சவால்களை சாதனைகளாக்கிய செயல்வீரனாக திகழ்ந்தார். தன்னைச் சூழ்ந்திருந்த வறுமை எனும் நச்சுவட்டத்தை அறிவு, உழைப்பு என்னும் தேடல்களினால் உடைத்து உயர்ந்த உன்னதமானவர்.
திட்டமிடல் சேவையின் முன்னோடியாக விளங்கிய அவர் கிளிநொச்சி நகரை திட்டமிட்டு வடிவமைக்க வேண்டும் என கண்ட கனவுகளும் அதற்காக உழைத்த திடமும் வரலாற்றின் பதிவாகும்.
அறிவியல்நகர் உருவாக்கம் அவர் ஆற்றிய அத்தகையபணிக்கு சாட்சியமாகத் திகழ்கிறது. கிளிநொச்சி கூட்டுறவு மண்டபம், மற்றும் இராணுவத்தால் இடித்தழிக்கப்பட்ட கிளிநொச்சி பண்பாட்டு மண்டபம் என்பவை இராசயநாயகம் ஐயா அவர்களின் சிந்தனையில் உருப்பெற்றவை.
தீவிரமான போர்முனைகள் சூழ்ந்திருந்த அக்காலத்தில் உணவுத்தடையை அரசு விதித்திருந்தது. பல்வேறு சவால்கள், அழுத்தங்கள், தன்முன்னே இருந்த போதும் இரண்டு தடவைகள் அரசாங்க அதிபராக பொறுப்பேற்கத் துணிந்தமை அவரது அபாரமான தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகும். குறிப்பாக, புலிகளுக்கு உணவைக் கொண்டு போய்கொடுக்கிறாயா? என பாதுகாப்பு உயர்பீடம் அச்சுறுத்திய போது ‘தாய்க்கு கொடுக்கும் நிவாரணத்தில் அந்த தாய் தனது புலிப்பிள்ளைக்கு உணவளித்தால் நான் என்ன செய்ய முடியும் அதற்காக முழு மக்களையும் பட்டினி போட்டு கொல்ல வேண்டாம்’ என வாதாடிய மக்கள் நல அதிகாரியாக எங்கள் மனங்களில் இருக்கிறார்.
யுத்தத்தினாலும் பொருளாதாரத்தடையினாலும் மக்கள் பட்டினி சாவின் விளிம்பில் இருந்தபோது பாடசாலைகளில் இலைக்கஞ்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் கல்வித்துறைக்கு அவர் ஆற்றியபணி அற்புதமானது.
பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள் தமது உயர்கல்வியைத் தொடர்வதற்கு சவால்களை எதிர்கொண்ட போது கிளிநொச்சி மாவட்ட கல்வி நிதியத்தை உருவாக்கி உதவியவர் இராசநாயகம் ஐயா.
பல முகாமைத்துவ உதவியாளர்களை பல்வேறு திணைக்களங்களிலும் அரச சேவையாளர்களாக உள்வாங்குவதற்கு அவர் ஆற்றிய காலப்பணி என்றும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கதாகும்.
பூநகரி மண்மீது கொண்டிருந்த தீராக்காதல் அவரது மகத்துவமான மண்பற்றின் வெளிப்பாடாக இருந்தது. திறந்த மனத்தினனாக கலந்துரையாடுவதும், இன்மொழி பேசி இதயங்களைக் கவர்வதும் இவரது ஆளுமைக்கு வலுச்சேர்த்தவை என்பேன்.
மாவட்டக்கல்வி நிதியம், தொழில் நுட்பக்கல்வி நிறுவனம், யோகர் சுவாமிகள் முதியோர் இல்லம், காந்தி சேவா சங்கம், என்பவை இவரது கல்வி அறப்பணிகளின் நிலைக்களங்களாக இன்று கிளிநொச்சியில் மிளர்கின்றன.
சைவத்தின் மீதும் தமிழின் மீதும் அறவற்ற பற்றுடைய இராசநாயகம் ஐயா உருத்திரபுரீச்சர சிவாலயத்தின் தலைவராக இருந்த போது வரலாற்றின் அபகரிப்பு ஒன்றிலிருந்து அவ்வாலயத்தையும் அம்மண்ணையும் பாதுகாத்தவர் என்பது பதிவு செய்யப்பட வேண்டியது.
எல்லாவற்றுக்கும் மேலாக 2009 ஆம் ஆண்டு பிற்பாடு பேரவலமும் பெருவலியும் சுமந்து நிராதரவாய் நின்ற எம் தேசக்குழந்தைகளை மகாதேவ சைவச்சிறுவர் இல்லத்தில் அரவணைத்து ஆயிரம் ஆயிரம் பிள்ளைகளின் வாழ்வில் ஒளியூட்டிய தந்தையாக ஐயா இருந்தார். தந்திரோபாய முகாமைத்துவத்தின் தலை சிறந்த அதிகாரியாக அன்பும் அறனும் தன்னிதயத்தில் சுமந்த அதியுயர் தலைவனாக விளங்கியதன் மூலம் கிளிநொச்சி மாவட்ட மக்களின் மனங்களில் நிலை பெற்ற ஒருவராக இராநாயகம் ஐயா பரிணமிக்கின்றார்.
கல்வி, நிர்வாகம், சமூகசேவைகள், அறப்பணிகள் என எல்லாவற்றிலும் தன்னை அர்ப்பணித்த உயர்திரு இராசநாயகம் ஐயா ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரும்பெரும் மனிதனாக, எங்களுக்கெல்லாம் வழிகாட்டி தன்வாழ்நாளை நிறைவு செய்திருக்கின்றார்.
அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரின் துயரால் துயரிற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், மகாதேவா சைவச்சிறுவர் இல்லக்குழந்தைகள் அவர் மீது அன்பும் அபிமானமுடைய அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
சிவஞானம் சிறீதரன்.
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
இணைத்தலைவர் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு,
கிளிநொச்சி.