அந்தமான் தீவுப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தீவிரமடைந்து வருவதால், சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அடுத்த வாரத்தில் கடும் மழை பெய்வதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்கள வட்டாரங்கள் நேற்று இரவு தகவல் வெளியிடுகையில், சிறிலங்காவுக்குக் கிழக்கே, அந்தமான் தீவுப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியை அவதானித்து வருகிறோம்.
ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
தற்போது, மழை பெய்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருந்தாலும், 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும்.
அந்தமான் கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்தம், புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதுபற்றி அடுத்த சில நாட்களில் தான் கூற முடியும்” என்று கூறியுள்ளன.
அதேவேளை, அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாறி சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் வரும் 5ஆம் திகதி தாக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தை மேற்கோள்காட்டும் மற்றொரு செய்தி கூறுகிறது.
இது குறித்து அடுத்த இரண்டு நாட்களின் பின்னரு சரியான கணிப்புகளை செய்ய முடியும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஓக்கி புயலின் தாக்கத்தினால் சிறிலங்காவில் தொடர்ந்து கொட்டி வந்த மழை, குறையும் என்றும், வடக்கு, கிழக்கு, ஊவா, தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மாத்திரம், 100 மி.மீ வரையான மழை பெய்வதற்கு சாத்தியங்கள் உள்ளதாகவும், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வடக்கு, கிழக்கில் அடுத்தவாரம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புயலைக் கண்காணித்து வருவதாக சிறிலங்கா செஞ்சிலுவைக் குழுவின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கிலும் இந்தியாவிலும் கடும் மழையும் காற்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சிறிலங்கா செஞ்சிலுவைக் குழுவின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கூறியுள்ளது.
இதற்கிடையே அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம், புயலாக தீவிரம் பெற்றால், அதற்கு சாகர் என்று பெயரிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.