இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசீமின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பாக, முஸ்லிம் மௌலவிகள் யாரும் முறைப்பாடுகளை மேற்கொண்டதாக தாம் அறியவில்லை என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று முன்னிலையாகி சாட்சியம் வாங்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசீமின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பாக, காத்தான்குடி பகுதியில் உள்ள முஸ்லிம் மௌலவிகள் யாரும் முறைப்பாடுகளை மேற்கொண்டதாக தாம் அறியவில்லை என அவர் இதன்போது சாட்சியம் வழங்கியுள்ளார்.
அதேநேரம் இந்த தாக்குதல் தொடர்பாக முன்னதாகவே தமக்கு தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நேற்றைய அமர்வில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.