இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி கிளார்க் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கவுசல்யா, சமீபத்தில் கோவை வெள்ளலூரைச் சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியைத் திருமணம் செய்துகொண்டார்.
இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்டில் கிளார்க் ஆக பணியாற்றிவருகிறார். தற்போது இவர் அந்தப் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், பிபிசி தமிழ் தொலைகாட்சிக்கு கவுசல்யா பேட்டி அளித்தபோது, தாம் இந்தியர் என்ற உணர்வையும், இந்தியா என்ற நாட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்தியர் என்ற உணர்வுடனும், இந்தியா என்ற நாட்டின் இறையாண்மையிலும் நம்பிக்கை உள்ளவரே இந்தியர் என்று கருதப்படுவார். அவ்வாறு இல்லாத ஒருவர் எப்படி வெலிங்டன் ராணுவ முகாமில் பணியாற்றுகிறார் என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இந்நிலையில், கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதற்காகப் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.