சஸ்கச்சுவானில் குடிபோதையில் வாகனம் செலுத்துவோர் மீதான சட்ட நடவடிக்கைகள் கடுமை
கனடாவின் சஸ்கச்சுவான் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றனர்.
இந்த திருத்தங்களின்படி, முதல்முறையாக குடிபோதையில் வாகனம் செலுத்துவோரின் சாரதி அனுமதிப் பத்திரம் மூன்று நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
அத்தோடு, இந்த நடைமுறை 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முன்னர் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வயதெல்லை தற்போது 19 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை அடிக்கடி குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், குடிபோதையின் அளவு தொடர்பில் சோதனை செய்யப்படும் மூச்சு பரிசோதனைக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.
கனடாவின் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில், சஸ்கச்சுவான் மாகாணத்தில் குடித்து விட்டு வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு தரவுகளின் பிரகாரம் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரின் விகிதம் நாடளாவிய ரீதியிர் ஒரு இலட்சத்திற்கு 210 ஆகக் காணப்பட்ட அதேவேளை, சஸ்கச்சுவான் மாகாணத்தில் இந்த விகிதம் ஒரு இலட்சத்திற்கு 620 என பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.