இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா.பொதுச்செயலர் அன்ரனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று முன்தினம் நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.
“இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எமது தரப்பில், இந்த நியமனம் குறித்து நாங்களும் கவலையடைகிறோம்.
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில்,நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களும், மிகஉயர்ந்த மனித உரிமை தரங்களுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விடயத்தில், ஐ.நா உறுதியுடன் உள்ளது.
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைத்து சிறிலங்கா சீருடை பணியாளர்களும் விரிவான மனித உரிமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிக்கை வெ ளியிட்டுள்ளது. . அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளில் அடுத்தடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரியொருவர், இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வெகுவாக அவதானம் செலுத்தியிருக்கிறார்.
சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிராக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவும் அவரது படையணியும் பல்வேறு குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போதிலும்கூட, அவர் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை குறித்து நான் மிகுந்த கவலையடைகின்றேன் என்று ஆணையாளர் பச்லெட் குறிப்பிட்டிருக்கிறார்.
சவேந்திர சில்வா இராணுவ அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்ட போது, அது கவலைக்குரிய விடயமாகும் என்று மிச்சேல் பச்லெட் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சமர்ப்பித்த தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா 58 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமைதாங்கினார். அவரது அந்தப் படையணி சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறும் வகையிலான குற்றச்செயல்களைப் புரிந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சவேந்திர சில்வாவின் இப்பதவி உயர்வானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30(1) தீர்மானத்தின் பின்னணியில் நீதியையும், பொறுப்புக்கூறலையும் நிறைவேற்றுவதில் இலங்கைக்குக் காணப்படும் பற்றுறுதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக அமையும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டிருக்கிறார்.
அத்தோடு இது நல்லிணக்கப்பொறிமுறைகளை மங்கச்செய்வதுடன், குறிப்பாக போரினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர்களின் பார்வையில் பெரும் பாதிப்பாக அமையும். மேலும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புத் தேவை ஏற்படுவதுடன், ஐ.நாவின் அமைதிகாக்கும் படையணியில் இலங்கை தொடர்ந்து பங்களிப்பை வழங்குவதற்கான இயலுமையையும் பாதிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.