சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் பெண்கள் டாக்சி ஓட்டுநர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர். அந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை கடந்த செப்டம்பரில் நீக்கப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லாரி, பைக் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு டிசம்பரில் அறிவித்தது.
இந்த நடைமுறையும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
இதைத் தொடர்ந்து, அங்குள்ள கால் டாக்சி நிறுவனங்கள், பெண் ஓட்டுநர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. உபெர் மற்றும் துபாயை சேர்ந்த கரீம் ஆகிய கால் டாக்சி நிறுவனங்கள் 10 ஆயிரம் பெண் ஓட்டுநர்களைப் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிய, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முதல்கட்ட குழுவினரை தேர்வு செய்து முடித்துள்ளனர்.
சவுதி அரேபியாவைப் பொறுத்தவரையில் கால் டாக்சி வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் பெண்களே. ஆண்களில் பெரும்பாலானோர் கார் வைத்திருப்பதால் அவர்களே ஓட்டிச் செல்கின்றனர். சவுதியில் கரீம் மற்றும் உபெர் நிறுவன கால் டாக்சியிலேயே பெண்கள் அதிகம் பயணம் செய்கின்றனர்.
தற்போது அங்கு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆண்களே. பெண்கள் பயணம் செய்யும் கால் டாக்சியில் பெரும்பாலும் சவுதி நாட்டிடைச் சேர்ந்தவர்களே ஓட்டுநர்களாக பணியமர்த்தப்படுகின்றனர்.