சவுதி அரேபியாவில் இருசக்கர வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கார் உள்ளிட்ட வாகனங்களை பெண்கள் ஓட்டுவதற்கு தடை உள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதில் இருசக்கர வாகனங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், இரு சக்கர வாகனங்களையும் சவுதி அரேபிய பெண்கள் இயக்கலாம் என்று அந்நாட்டின் தலைமை போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்தது. மன்னர் ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய புதிய விதிமுறைகளை அறிவித்த தலைமை போக்குவரத்து இயக்குனரகம் விடுத்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சவுதி அரேபிய பெண்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் போன்ற வாகனங்களை ஓட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு(2018) ஜூன் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும். இந்த சட்டம் ஆண், பெண் இருபாலரும் சரிசமம் என்பதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பெண்கள் ஓட்டும் இருசக்கர வாகனங்களுக்கு என தனிப்பட்ட முறையில் நம்பர் பிளேட் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரம் சாலை விபத்துகளுக்கு காரணமான பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியாக பெண்களால் நடத்தப்படும் விசாரணை மையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.