இந்தியா உள்ளிட்ட கொரோனா சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் சென்று வந்தால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயண தடை விதிப்பதுடன், பெரும் தொகை அபராதமாக வசூலிக்கப்படும்’ என சவுதி அரேபிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபியா, சிரியா, லெபனான், ஏமன், ஈரான், துருக்கி, ஆர்மேனியா, எதியோப்பியா, சோமாலியா, காங்கோ, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, பெலாரஸ், வியட்னாம் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அந்நாடுகளை சிகப்பு பட்டியலில் சவுதி அரேபிய அரசு சேர்த்துள்ளதுடன் அந்நாடுகளுக்கு செல்வதை தடை செய்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது கொரோனா சிகப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியர்கள் அந்நாடுகளுக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடையை மீறி சிகப்பு பட்டியல் நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது, வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சென்று வந்தாலோ, மூன்றாண்டுகள் பயண தடை விதிக்கப்படும்.மேலும், பெரும் தொகை அபராதமாக வசூலிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.