தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் தமிழரின் மரபுரிமை உட்பட்ட சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய இயக்கங்களில் தனித்துவமானதொரு பேரியக்கமாகும். புலிகள் இயக்கம் ஆரம்பித்த காலம் தொடக்கம், இன்றுவரை இலங்கைத் தமிழர்கள் உரிமை, அரசியல், சகவாழ்வு, சமூகம் என்ற சகல சந்தர்ப்பங்களிலும் அவர்களது பெயர், பேச்சுக்குப் பேச்சும், வரிக்கு வரியும் உச்சரிக்கப்படாமல் இல்லை.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வேண்டப்பட்ட விடுதலைக்காகவும் தம்மை விரித்துக்கொண்டு களம் புறப்பட்டவர்க ளாகவே அவர்கள் மக்கள்முன் தெரிந்தனர். கால ஓட்டம், புலிகள் பக்கத்தில் கருத்தாழம்மிக்க, ஒரு பற்றற்ற மாறுதலை உருவாக்கி முகமறியா மனிதர்கள் ஆக்கி இருக்கின்றது.
சீருடையும், சீரிய நன்னடத்தையும் கொண்டு சமூகத்துள் உலவியவர்கள், 2009ஆம் ஆண்டு இறுதிப் போருக்குப் பின்னர் சிறை, புனர்வாழ்வு, சமூகத்துடன் இணைப்பு என்ற மூன்று சம்பிரதாயமற்ற சடங்குகளுக்கு முகம் கொடுத்து, தாம் உயிர் கொடுக்கத் தயாராக இருந்த சமூகத்துக்குள் நிராயுதபாணிகளாக வரும்போது முற்றிலும் மாறுபட்ட மனிதர்களாக வாழ்வியலை எதிர்கொள்கின்றனர்.முத்திரை குத்தப்பட்டவர்களாக
நிலை நிறுத்தப்பட்டுள்ள
முன்னாள் புலி உறுப்பினர்கள்
விரும்பியோ, விரும்பாமலோ அவர்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திலிருந்து விடுபட முடியாமல் முத்திரை குத்தப்பட்ட மனிதர்களாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான முன்னாள் புலி உறுப்பினர்கள் அங்கவீனர்களாகவும், போரில் தம் உடலில் ஏற்றுக்கொண்ட விழுப்புண் காரணமாக, உடல் பலமற்றவர்களாகவும் நடமாடுகின்றனர். பெரும்பாலான முன்னாள் புலி உறுப்பினர்கள் சிறை வாசத்தின்பின் திடீரென சாவடையும் உடல்நிலையிலேயே காணப்படுகின்றனர். இது தொடர்பான உள்ளார்த்தம் பொதுவானதாகவே வைத்துக்கொள்வோம். ஆனாலும், சமூகம், வாழ்வியல் என்ற கண்ணோட்டத்தில் இவர்களது தளம், பொதுமக்கள் வாழ்வில் இருந்து சரிவர இரண்டாகப் பிரிக்கப்படு கிறது.
போருக்கு முன்னர் மதிக்கப்பட்ட அவர்கள் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் அடங்கி ஒடுங்கி வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஒருசிலர் தமது வாழ்வியலையும், வாழ்க்கைப் போக்கையும் மாற்றிக் கொண்டு, வௌிநாடுகளில் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் புனர்வாழ்வுக்குப் பின்னர் வௌிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முடியாத இக்கட்டான சூழலில், வாழ்க்கையை நகர்த்துகின்றமை முற்றிலும் உண்மையான விடயம்.
பேச்சுச் சுதந்திரம் அற்றவர்களாகிப்
போனதாக உணரும்
முன்னாள் புலி உறுப்பினர்கள்
சமூகத்துக்குள் கலகலப்பாக, ஒரு அங்கமாக இருந்த புலி உறுப்பினர்கள், சுயமான பேச்சுச் சுதந்திரமோ, நியாயம் நீதிகளை எடுத்துரைக்கும் சுதந்திரமோ அற்றவர்களாகிப் போனார்கள்.
தாம் உண்டு, தம்பாடு உண்டு என வாழவேண்டிய நிர்ப்பந்தம் சூழல் காரணியாக அவர்களை முடக்கி வைத்திருப்பது, அவர்களது தனிப்பட்ட வாழ்வியலிலும், மனதளவிலும் கடுமையான தாக்கத்தைச் செலுத்துவதை உணரமுடிகின்றது.
மக்களோடு மக்களாக தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியாத ஒரு விசித்திரமான பிரிவு நிலையை அவர்கள் சந்திக்கின்றார்கள். கால ஓட்டத்தில் மாற்றம் கண்டுவரும் அரசியல், சமூக சூழ் நிலைகளே இதற்கான காரணம் என உணரமுடிகிறது.
பெரும்பாலும் அங்கவீனமுற்ற போராளிகளின் நிலமை மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றது. தமது வாழ்வியல் போக்கை மாற்ற வலு இல்லாமையால், அவர்கள் தமது வாழ்நாளோடு போராடும் நிலமை பரிதாபத்துக்கு உரியதாக ஆகி இருக்கின்றது.
சமூகத்தில் இப்போது தலை விரித்தாடும் சமூக ஊடகங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், தமக்கான கருத்துச் சுதந்திரம் மூலம் ஓரளவு தமது பிரச்சினை களை (பொருளாதாரம், மருத்துவம்) நண்பர்களோடு பகிர்ந்து தமது வாழ்வை நகர்த்துகின்றனர். ஆனால், இப்படியான சமூகத் தொடர்பு இல்லாத முன்னாள் புலி உறுப்பினர்களின், அதுவும் உடல்காயங்களுடன் அங்கவீனமாக இருப்பவர்களின் நிலமை சொல்லி மாளாதது.
இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில்
ஒரு சில முன்னாள் புலி உறுப்பினர்கள்
குறிப்பிட்ட ஒருசிலரின் நிலமை சொல்லொணாத் துயரமானது. சமூகத்துக்குள் தாம் ஒரு முன்னாள் புலி உறுப்பினர் என்று சொல்வதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் தொடர்பில் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பாகவே திண்டாடுகின்றனர்.
அரச, இராணுவ பார்வை அவர்களில் இருந்து விலகாமல் கழுகுக்கண்கள் அவர்களை மொய்த்துப் பிடித்த வண்ணம் உள்ளதும் உண்மையானதே.
இந்த முன்னாள் புலி உறுப்பினர்களின் வாழ்வியலை மேம்படுத்த பலர் முன்வருகின்றபோதும், அவர்களுக்கான உளவளத்தைத் தர எவரும் முன்வராமை கவலைக்குரியது. ஒருமனிதனால் மன ஆரோக்கியத்தைப் பேணமுடியாமல் போனால், உடல் நலிவுறுவது இயற்கையே. நலிவுறும் உடலையே தூக்கி நிறுத்தும் வல்லமை மன ஆற்றுப்படுத்தலுக்கும், மனத் தைரியத்துக்கும் உண்டு. இதைப் பொறுப்பானவர்கள் நன்குணர்ந்துகொள்ள வேண்டும்.
பொறுப்புடன் அவர்களது மனதை
அண்மிக்கும் செயற்பாடுகளே
தற்போது அவச।ியமானவை
வீரமுழக்கங்களும், வீர வணக்கங்களும் அவர்களின் மன உணர்வுகளைத் தற்போது பிரித்துப்போடும் நிலையில் இல்லை. காரணம், அவர்கள் நோயினாலும், விழுப்புண்ணா லும், வறுமையாலும் நலிவுற்று இருக்கின்றனர். அவர்களுக்கு ஆக்ரோசமான பேச்சுக்களையோ, வீர வசனங்களையோ கேட்கும் மனநிலை இல்லை. எனவே பொறுப்புடன் அவர்களின் மனதை அண்மிக்கும் செயற்பாடுகளே தற்போது தேவையானவை. தாம் அனாதரவாக்கப்பட்டுள்ளோம் என்ற உள்ளுணர்வு அவர்களிடம் இருப்பதை நான் நேரடியாக கண்டு, கேட்டு உணர்ந்துள்ளேன். ஆகையினால் அவர்களின் மனநிலையில், மாற்றத்தை ஏற்படுத்தி உடல்நிலையைத் தேற்றிடநாம் முன்வர வேண்டும். ஒருசிலருக்கானது என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக அவர்களது உள நலனில் அக்கறை காட்ட வேண்டிய தலையாய கடமை இன்றைய எமது தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு.
அண்மையில் ஒரு முன்னாள் புலி உறுப்பினர் (திலீபன் என்ற பெயர் கொண்டவர்) படுத்த படுக்கையாக தன் உடல் உபாதையோடு போராடும் விடயம் வௌிக்கொணரப்பட்டது. யுத்தம் முடிவடைந்தும் 9வருடங்களின் பின் இப்படி ஒரு உயிர் வாழ்வோடு போராடிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டமை துரதிஷ்டவசமான விடயமே. காலம் முந்திய நிலையில் அவர் கண்டறியப்பட்டு இருந்தால், அவரது வாழ்க்கை நிலமையை கண்டிப்பாக மாற்றி அமைத்திருக்க முடியும். எனவே அவர்கள் தொடர்பில் பாராமுகமாக சமூகம் இருப்பது கவலைக்குரியது. குறிப்பிட்ட பல வருடங்கள் அவர்கள் உணவுக்கும் உடைக்கும் தமது தலைமையில் தங்கி வாழ்ந்தவர்கள். சுயமான பொருளாதாரம், வாழ்வியல் என்பது போராட்டத்துக்கு அடுத்த மாறுபட்ட படிநிலை. இதனை அவர்கள் யாதார்த்தமாக உணர்வது மிகவும் கடினமானது. முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையைச் சந்தித்தவர்கள் சமூகத்தின் தற்போதைய மாற்றத்துள் நுழைவது சவாலான விடயமே.
சமூக ஆர்வலர்களும்
பொறுப்புள்ளவர்களும்
முன்னாள் போராளிகள் விடயத்தில்
கரிசனை கொள்ளவேண்டும்
இதனை சமூக ஆர்வலர்களும் பொறுப்புள்ளவர்களும் நன்கு உணர்ந்து அவர்கள் தொடர்பில் கண்டிப்பாக கரி।சனைகொள்ள வேண்டும். அவர்கள் வாழ்வியலை நுணுக்கமாக வழிப்படுத்த உறுதுணை புரிய வேண்டும். ‘‘சமூகத்துள் இணைப்பு’’ என்ற சொற்பதமே, அவர்களை பிரிவினைப்படுத்திய பின்பே சமூகத்துக்குள் நகர்த்தி இருக்கின்றது. இந்த நிலமையை மாற்றி அவர்களின் உள, உடல் நலனில் கரிசனை கொள்ளல் மனித பொது நீதியாக ஆகியுள்ளது.
தமது நிலமை தொடர்பில் பலர் வௌிப்படையாக பேசமுடியாமல் உள்ளமையும், இங்கு நோக்க வேண்டிய விடயம். அரசியல் நகர்வு, சுதந்திரம் என்ற பக்கம் பார்க்காமல், சக சமூகமாக அவர்களை நோக்கும்போது, தனித்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் விசித்திரமாக உள்ளன. அவை, சமூக நிலையில் தாக்கம் செலுத்துவதை அவர்கள் உணராமலும் இல்லை. உதவி, வாழ்வு என்று அவர்கள் ஏமாற்றப்பட்ட கதைகளும் இல்லாமல் இல்லை. சமூகப் பொறுப்புணர்வு ஒன்று கண்டிப்பாக இவர்கள் தொடர்பில் ஏற்படுத்தப்படுதல் தற்போது இன்றியமையாததாக ஆகியுள்ளது. – ப்ரியமதா பயஸ் –