மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. குறித்த போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
ஆகவே தமிழக அரசு சார்பில் இரண்டு கோடி ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,
பராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள்.என்றும் சளைக்காத தனது திறமையால் வெள்ளி வென்றுள்ளார் மாரியப்பன்.
இளைஞர்களிடம் ஊக்கத்தை விதைக்கும் வகையில் விருதுகளை வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்றார்.
உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் கூறுகையில்,
போட்டி தொடங்கிய போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் 1.80 மீட்டர் உயரம் தாண்டிய பிறகு மழை அதிகமானது.
அப்பொழுது நான் அணிந்திருந்த ‘சாக்ஸ்’ ஈரமானதால் ஓடி சென்று அதிக உயரம் தாண்டுவதில் சிரமம் உண்டானது.
சிரமம் ஏற்பட்டிருக்காவிட்டால் நான் நிச்சயம் 1.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றிருப்பேன். எனது லட்சியம் மழையால் பாழாகி விட்டது.
உலக சாதனையோடு (1.96 மீட்டர் உயரம்) தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது இலக்கு இந்த பராலிம்பிக்கில் நிறைவேறவில்லை. அடுத்த முறை வரலாறு படைக்க முயற்சிபேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.