சிங்காரா எனப்படும் அரிய வகை மான்களை வேட்டையாடியதாகத தொடரப்பட்ட வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டதில், மிக முக்கிய விஷயமாக அமைந்தது எது தெரியுமா?
ஹைதராபாத்தைச் சேர்ந்த டிஎன்ஏ ஃபிங்கர்பிரிண்டிங் மற்றும் டயாக்னாஸ்டிக்ஸ் மையம்தான். ராஜஸ்தானில் சிங்காரா எனப்படும் அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு தண்டனை பெற்றுத் தர முக்கியக் காரணமாக இந்த ஆய்வு மையமே அமைந்திருந்தது.
இந்தியாவில் வன விலங்குகளுக்கு எதிரான குற்ற வழக்கில் டிஎன்ஏவை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தின் மூலம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இது குறித்து டிஎன்ஏ ஃபிங்கர்பிரிண்டிங் மற்றும் டயாக்னாஸ்டிக்ஸ் மையத்தின் முன்னாள் ஊழியர் டாக்டர் ஜிஏ ராவ் கூறுகையில், சல்மான் கான் வழக்கு 1999ம் ஆண்டு எங்கள் மையத்துக்கு வந்த போது, ஆன்ந்ரோபோலோஜிகல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்தோம். சல்மான் கானால் கொல்லப்பட்ட மான்களின் உடல்கள் புதைக்கப்பட்டுவிட்டன. அவற்றை தோண்டி எடுத்து உடல்களை ஆய்வு செய்த அந்த இளம் இந்திய வனத் துறை அதிகாரிக்கு டிஎன்ஏ-வை அடிப்படையாக வைத்து உயிரினத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மிக அருமையாகத் தெரிந்திருந்தது. இந்த தொழில்நுட்பம்தான் சல்மான்கான் வழக்கில் பேருதவியாக இருந்தது என்றார்.
கைப்பற்றப்பட்ட விலங்கின் சடலத்தைக் கொண்டு ஆய்வு செய்து அளித்த அறிக்கைதான், நீதிமன்றத்தில் கடைசி வரை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
சல்மான் கான் வழக்கில் ஹைதராபாத் மையம் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. மேலும், கைப்பற்றப்பட்ட சிங்காராவின் சடலத்தில் நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனையுடன், ஹைதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்காரா வகை மான்களின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டிஎன்ஏவும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. அதில் இரண்டு முடிவுகளும் ஒத்து இருந்ததும் முக்கிய ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்றும் ராவ் தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி:
சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சாட்சியங்களும், ஆதாரங்களும் சல்மானுக்கு எதிராக இருந்ததையடுத்து இத்தகைய தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த திரை நட்சத்திரங்கள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, சையஃப் அலி கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் தற்போது இத்தகைய தீர்ப்பு வெளியாகியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் ‘ஹம் சாத் சாத் ஹைன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் சல்மான், தபு, நீலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டன. அன்றைய தினம் இரவில், வனப்பகுதிக்கு அருகே ஜிப்சி வாகனத்தில் சல்மான் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அரிய வகை மான்கள் அங்கு உலவிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மான்களை சல்மான் கான் வேட்டையாடினார். உடன் சென்ற நட்சத்திரங்களும் அதற்கு உதவியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 9/61-இன் கீழ் சல்மான், சையஃப் அலி கான், தபு, நீலம், சோனாலி, துஷ்யந்த் சிங் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. அந்த சட்டப் பிரிவின்படி குற்றம் நிரூபணமானால் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பலதரப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தச் சூழலில், கடந்த மாதம் 28-ஆம் தேதி வழக்கின் மீதான இறுதி வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. அதைக் கேட்டறிந்த நீதிபதி தேவ் குமார் கத்ரி, ஏப்ரல் 5-ம் ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் விவரங்களை அறிவதற்காக சல்மான் கான் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். குற்றம்சாட்டப்பட்ட பிற நட்சத்திரங்களும் ஆஜராகியிருந்தனர். வழக்கின் வாத, பிரதிவாதங்களும், சாட்சியங்களும் சல்மான் கான் மான் வேட்டையில் ஈடுபட்டதை உறுதி செய்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார். வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான் கான் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தபு உள்ளிட்ட 5 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதி விளக்கமளித்தார்.