ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைமீது விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனக் கோர ஈழத் தமிழ் மக்களுக்கு முழு உரிமையும் உண்டு என்பதை சிங்கள தேசம் மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகின்ற போதும், அதற்கான உழைப்பை மேற்கொள்ளுவதில் தமிழ் தலைமைகளுக்கு வல்லமை இல்லை என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச விசாரணை கோரும் சிங்கள தேசம்
“சுகாதார அமைச்சில் ஏற்படுத்தப்படுகின்ற முறைகேடுகள், ஓரவஞ்சகத்தை உடன் நிறுத்தாவிட்டால் ஜெனீவா, உலக தொழிலாளர் அமைப்பு, உலக சுகாதார ஸ்தாபனம் உட்படச் சர்வதேசத்திடம் முறையிடுவோம் என பௌத்த தேரர் ஒருவர் ஸ்ரீலங்கா அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்ட செய்தி தென்னிலங்கை சிங்கள ஊடகங்களில் முதன்மை பெற்றிருக்கின்றது. தொழிற் சங்க உரிமைக்காகவே சர்வதேசத்தை அணுகுவோம் என குறித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்காவின் பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித், சர்வதேச விசாரணை கோருகின்ற விதத்தில் தொடர்ந்தும் கருத்துக்களைக் கூறி வருகிறார். ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரண தேவை என்று அவர் அழுத்தமாக வலியுறுத்தினார். அத்துடன் ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டமை குறித்தும் சர்வதேச விசாரணையே தேவை என பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் கடந்த காலத்தில் எதிர்கட்சிகளில் இருந்த சிங்களத் தலைவர்களும் தமக்கு அரசியல் நெருக்கடிகள் ஏற்கபட்ட சர்வதேச விசாரணையை கோரியிருந்தனர். சரத்பொன்சேகா, மகிந்த ராஜபக்ச தரப்பினர், ரணில் தரப்பினர் என அனைவரும் தமக்கு நிகழ்ந்த அரசியல் முரண்பாடுகள் அல்லது நெருக்கடிகளின் போது சர்வதேச தலையீடு மற்றும் விசாரணை தேவை என வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை
ஸ்ரீலங்கா சிங்களப் பேரினவாத அரசினால் தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வும் ஒற்றை வழியுமென தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமது சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கு சர்வதேச தலையீடு கோரும் சிங்கள தேசம், இனப்படுகொலை விவகாரத்தில் மாத்திரம், சர்வதேச தலையீடு வேண்டாம் எனக் கூறி உள்ளக விசாரணை என ஏமாற்றுவது எந்த வகையில் நியாயமும் தர்மமும் ஆகாது என்பதை வலியுறுத்தி நிற்கின்நோம்.
“உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி, எனக்கு வந்தால் இரத்தம்” என்ற சிங்கள தேசத்தின் அணுகுமுறை வெறுமனே நகைச்சுவையை மாத்திரம் உணர்த்தவில்லை. மிகப் பெரும் பாரபட்சத்தையும் இனவழிப்பு குற்றத்தை மறைக்கும் கைங்கரியத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. நுளம்பு கடிப்பதற்குக்கூட சர்வதேச விசாரணை கோரும் சிங்கள தேசம், சிங்கங்களினால் இனப்படுகொலை வேட்டை ஆடப்பட்ட ஈழத் தமிழினம் சர்வதேச விசாரணை கோருவதற்கு முழு உரிமையும் உடையவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
சர்வதேச தலையீடு என்பது அனைத்துலக உரிமை
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பினன்னர், உலக நாடுகளின் அமைதி மற்றும் மக்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கவும் வலியுறுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பல்வேறு துறைகளும் உருவாக்கப்பட்டன. இதன் வாயிலாக உலகின் அனைத்து மக்களின் உரிமைகளும் உறுதி செய்யப்படுவதாகவும் அதற்கு அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் உடன்பாட்டு அங்கத்துவம் வகிக்கின்றன.
கல்வி, சுகாதாரம், அறிவியல், பண்பாடு, மரபுரிமை போன்ற எந்த உரிமைகளும் மீறப்படுதல், மற்றும் பறிக்கப்படுதல் என்பன அனைத்துலக குற்றங்களாகும். இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்கள் எழுதுபது ஆண்டுகளாக உயிர் வாழும் உரிமையிலிருந்து அனைத்தையும் பறிகொடுத்து, பெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். அனைத்துலக சட்டங்களின்படி ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது மனித குலத்திற்கு விரோதமான பாரதூரமான குற்றச்செயல் ஆகும். இதனை பன்னாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கையில் வரலாற்று ரீதியாக இனப்படுகொலை நடந்து வருகின்றது என்றும், அது முள்ளிவாய்க்காலில் மாத்திரம் நடக்கவில்லை என்றும் வலியுறுத்தி சட்டபூர்வமான தர்க்கங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வடக்கு மாகாண சபையால் கடந்த 2015ஆம் ஆண்டில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு கிழக்கில் மக்களால் உருவாக்கப்பட்ட ஜனநாயக சபை ஒன்றின் குறித்த தீர்மானம், சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதை ஐ.நா ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே அனைத்துலக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அர்த்தமுள்ள செயலாகும்.
தமிழ் தலைவர்களுக்கு தடுமாற்றம்
அற்பமான விடயங்களுக்கு எல்லாம் சர்வதேச தலையீட்டையும் விசாரணையையும் சிங்கள தேசம் கோருகின்ற நிலையில், தமிழ் தலைவர்கள் தடுமாறி வருகின்றமை ஈழ இனப்படுகொலையின் நீதியை நிலைநாட்டுவதில் இன்னொரு தடையாகவும் தலையிடியாகவும் உள்ளது. தமிழ் தலைவர்களின் மெள்ளத்தனம் என்பது பாரிய அதிர்ச்சியைத் தருகின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று கைவிரிக்கும் தமிழ் தலைவர்கள், தேர்தல்களின் போது சர்வதேசத்திடம் நீதிபெற்றுத் தருவோம் எனக் கூறியே வாக்குகளை அள்ளிப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுகின்றனர்.
சிங்கள தேசம் தமது உரிமைகளுக்காக சர்வதேசத்தை நோக்கிச் செல்லும் இந்த சூழலானது, சர்வதேச விசாரணை ஊடாகவே இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அதன் வாயிலாகவே ஈழத்தில் மக்கள் அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும்தான் வெளிப்படுத்தி, வலியுறுத்தி நிற்கிறது என்தைச் சுட்டிக்காட்டுவதுடன் அதற்கான செயலூக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க காலம் தாழ்த்தக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.