சர்வதேச பயோனிக் ஒலிம்பிக் போட்டிகள்: சுவிஸில் முதல் முறையாக தொடங்கியது
Cybathlon என அழைக்கப்படும் இந்த ஒலிம்பிக் போட்டியில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்கள் உடல் உறுப்புகள் போன்ற செயற்கை மின்சாதனங்களை பொருத்தி இந்த விளையாட்டில் பங்கேற்பார்கள்.
சுவிஸில் உள்ள சூரிச் நகரில் எதிர்வரும் சனிக்கிழமை அன்று தொடங்க உள்ள இந்த பயோனிக் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 65 குழுக்கள் பங்கேற்று தங்க பதக்கத்திற்காக விளையாடுவார்கள்.
விளையாட்டு துறையில் முதன் முறையாக ஒரு புரட்சியை ஏற்படுத்தும் இந்த பயோனிக் ஒலிம்பிக் குறித்து Aldo Faisal என்ற நரம்பியல் துறை பேராசிரியர் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
‘இந்த பயோனிக் விளையாட்டில் மிகவும் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட, குறிப்பாக விரல்களை கூட அசைக்க முடியாத வீரர்கள் பங்கேற்பார்கள். இப்போட்டிகள் உலக மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை’ என கருத்து தெரிவித்துள்ளார்.
கெவின் எவிசன் என்ற தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவரும் இப்போட்டியில் பங்கேற்கிறார்.
கெவின் கையை இழந்துள்ளதால், செயற்கையான மின்சாதன கையை பயன்படுத்தி இப்போட்டியில் பங்கேற்கிறார்.
உடல் தசைகளின் அசைவுகளுக்கு ஏற்ப செயற்கையாக உருவாக்கப்பட்ட அவரது விரல்கள் செயல்படும்.
ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியின்போது பேசிய கெவின், ‘இப்பயிற்சி மிகவும் எளிதாக தான் உள்ளது.
ஆனால், உண்மையில் அரங்கத்திற்கு சென்று விளையாடுவது என்பது ஒரு பெரிய சாதனையாக அமையும்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் சிவா சிவகாந்தன் என்பவரும் இந்த பயோனிக் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
23 வயதான இந்த வாலிபர் கணித துறையில் சிறந்தவர் ஆகும். கடந்த 2012ம் ஆண்டில் சிவாவின் முதுகுதண்டு வரை கட்டி ஒன்று பரவியதால், அவரது பாதி உடல் செயலிழந்துள்ளது.
எனினும், இதன் பிறகு நடைபெற்ற சிகிச்சையில் அவரது கட்டி நீக்கப்பட்டது. ஆனால், முதுகுதண்டின் பெரும்பாலான தசைகளும் நீக்கப்பட்டது. தற்போது முதுகில் செயற்கையான மின்சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மின்சாரத்தால் இயங்கும் சக்கிர நாற்காலியில் அமர்ந்தவாறு சிவா இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். இந்த சக்கர நாற்காலி சிவாவின் கண்களின் அசைவுகளுக்கு ஏற்ப செயல்படும்.
இந்த ஒலிம்பிக் போட்டி குறித்து சிவா பேசியபோது, ’எனக்கு தெரிந்த வரை, இந்த பயோனிக் ஒலிம்பிக் போட்டியில் அதிகளவிலான மின்சாதனங்களை உடலில் பொருத்திக்கொண்டு பங்கேற்கும் வீரர் நான் தான் என நினைக்கிறேன்.
இப்போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்வது தான் எனது முதல் குறிக்கோள். அதே நேரம், என்னை விட மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொழில்நுட்பம் எவ்வளவு உதவிகரமாக வளர்ந்து வருகிறது என்பதை அறிந்த கொள்ள ஒரு வாய்பாகவும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் அமையும் என சிவா சிவகாந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
சூரிச் நகரில் உள்ள சுவிஸ் அரினாவில் இந்த பயோனிக் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த அரங்கத்தில் வழக்கமாக ஹாக்கி விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதால், தற்போது பயோனிக் ஒலிம்பிக் விளையாட்டிற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.