சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு குறித்து அமெரிக்கா அறிவிக்கும்! தமிழ் கூட்டமைப்பிடம் நிஷா சுட்டிக்காட்டு
பொறுப்புக்கூறல் தொடர்பான பொறிமுறையொன்று உருவாக்கப்படும் பட்சத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு குறித்த தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜங்க செயலாளர் நிஷா பிஷ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பொறிமுறை உருவாக்கப்படுவது அத்தியாவசியம் என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜங்க செயலாளர் நிஷா பிஷ்வால் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் தொடர்பான பிரதி இராஜாங்க செயலாளர் டொம் மலிநொஷ்கி ஆகியோர் நேற்றுக் காலை அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களைச் சந்தித்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் எம்பிக்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு செயற்பாடுகள், அரசியலமைப்பில் கொண்டுவரப்படவிருக்கும் திருத்தங்கள் மற்றும் அமெரிக்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணையின் அமுலாக்கங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் மாறுபட்ட கருத்து காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. எனினும், மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பொறிமுறை உருவாக்கப்படுவது அத்தியாவசியம்.
இவ்வாறான பொறிமுறையொன்று உருவாக்கபட்டதும் தமது நிலைப்பாட்டை கூறமுடியும் என நிஷா பிஷ்வால் தம்மிடம் எடுத்துக் கூறியதாக எம்.ஏ.சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டார்.
பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்றும், அரசாங்கத்துக்கு ஏதாவது சவால்கள் இருந்தால் அதற்கான ஒத்துழைப்பை வழங்க தாம் தயார் என்ற நிலைப்பாட்டையும் இதன்போது அவர் வெளிப்படுத்தியதாகவும் சுமந்திரன் கூறினார்.
அரசியல் கைதிகள் மற்றும் காணி விடுவிப்புக்கள் குறித்து விசேடமாகப் பேசியுள்ளோம். ஜெனீவா தீர்மானத்தில் உள்ள விடயங்களை மிகவும் தாமதமாக நடைமுறைப்படுத்துவது பற்றி எடுத்துக் கூறியிருந்தோம். இவை அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், அமெரிக்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உறுதிமொழி வழங்கிய பல விடயங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் இருப்பதை தாம் அவர்களிடம் எடுத்துக் கூறியிருந்ததாகவும், இதனை தம்மால் கூட காணக்கூடியதாக உள்ளது என்று நிஷா பிஷ்வால் குறிப்பிட்டதாகவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்பி கூறினார்.
வடக்கில் இன்னமும் காணப்படும் இராணுவ பிரசன்னம், காணி விடுவிப்புக்களில் காணப்படும் மந்தமான செயற்பாடுகள் மற்றும் முல்லைத்தீவில் புதிதாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மீள்குடியேற்றங்கள் தொடர்பில் நிஷா பிஸ்வால் தலைமையிலான குழுவினர்களிடம் எடுத்துக் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்றும், நல்லிணக்க விடயத்தை கைவிடப் போவதில்லையென்றும் நிஷா பிஷ்வால் கூறியதாக சித்தார்த்தன் எம்.பி மேலும் தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.