சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தமைக்காக அந்நாட்டுப் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீபுக்கும் இடையில் திங்கட்கிழமை (17) தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது இருநாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தமைக்காக அந்நாட்டுப் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.
அத்தோடு பிராந்திய அமைதி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதில் இலங்கை வழங்கிவரும் பங்களிப்புக்கு மதிப்பளிப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளும் வெகுவிரைவில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடையும் என்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமைக்காக பாகிஸ்தானுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் கடினமான முயற்சிகளைப் பாராட்டினார்.