நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் தயாராகி வரும் ‘பறந்து போ’ எனும் திரைப்படம் ரோட்டார்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
‘தங்க மீன்கள்’ எனும் தேசிய விருது பெற்ற படைப்பை வழங்கிய இயக்குநரும் நடிகருமான ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ பறந்து போ ‘ எனும் திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் அண்டனி, அஞ்சலி , மாஸ்டர் மிதுல் ரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நகைச்சுவை ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்திற்காக செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பாடசாலையில் பயிலும் பிடிவாதம் மிக்க மாணவனுக்கும் , பொருளாதார ரீதியில் பற்றாக்குறைவுடன் போராடும் அவருடைய அன்பு மிக்க தந்தைக்கும் இடையேயான அர்த்தமுள்ள ஒரு பயணத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. முதன் முதலாக நகைச்சுவை வகைமையை கையாண்டிருக்கிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என நம்புகிறேன்” என்றார்.