நாட்டின் சுதந்திரம், அபிமானம் ஆகியவற்றின் மீது தலையிட சர்வதேசத்திற்கோ, சர்வதேச நிறுவனங்களுக்கோ இடமளிப்பதில்லை என்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வெளிநாடுகளின் தலையீடுகள் இன்றி நாடு மற்றும் நாட்டு மக்களின் சுதந்திரம், அபிமானத்தை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பெச்லட் தற்போது கூறுகிறார்.
உலகில் சுமார் 104 நாடுகள் தற்போது அவரகாலச் சட்டத்தை அறிவித்து, செயற்படுத்தி வருகின்றன. இந்த நாடுகள் அவர்களுக்கு தெரிவதில்லை. எமது நாட்டின் மீதே அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பாக நாங்கள் வருத்தப்படுகிறோம். சஜித் மற்றும் ரணில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் காரணமாகவே நாங்கள் இன்னும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றோம். நாங்கள் நாட்டின் சுதந்திரத்தையும் அபிமானத்தையும் பாதுகாத்துக்கொண்டே செயற்படுவோம் எனவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.