சர்வதேச ஆசிரியர் தினமான நாளைய தினம் அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாளை 6 ஆம் திகதி புதன்கிழமை சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தொகுதி ரீதியாக 312 கல்வி நிலையங்களை மையமாகக்கொண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட இரு பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க எதிர்பார்துள்ளோம்.
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடித்து, அதற்குரிய சட்ட திட்டங்களுக்கு அமைய குறைந்தளவானோரை இணைத்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
எனவே அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு விரைவில் தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தினை வலியுறுத்துகின்றோம்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர போன்றோரது வாய்மூல அச்சுறுத்தல்களை நாம் துளியளவிலும் கவனத்திற்கொள்ளவதில்லை. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தினை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என்றார்.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவிக்கையில்,
இன்று எமது பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை வழங்கினால் எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
ஆனால் அரசாங்கம் மூளையைப் பயன்படுத்தி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக பலவந்த அதிகார போக்கில் செயற்படவே முயற்சிக்கிறது.
இவ்வாறு செயற்படுபவர்களிடம் அவர்களது இராணுவ பக்கத்தையும், பொலிஸ் பக்கத்தையும் நாட்டிலுள்ள அதிபர் ஆசிரியர்களிடம் காண்பிக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]