சர்வதேச நிறுவனங்கள் , அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு வெகுவிரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
எனினும் பாராளுமன்றத்தில் சிலர் இதனை விரும்பவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பெண் அமைப்பாளர்களுக்கான பயிற்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் ஏனைய அனைத்து கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் அவதானம் செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் பாராளுமன்றத்தில் சிலர் சர்வகட்சி அரசாங்கத்தை விரும்பவில்லை. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திடமே காணப்படுகிறது.
எனினும் இதில் பல இடையூறுகள் காணப்படுகின்றன. தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு , சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அத்தியாவசியமானதாகும்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜைக்கா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் மத்தியில் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்குள்ள சிறந்த வழி சர்வகட்சி அரசாங்கமேயாகும்.
எனினும் இதனையும் சிலர் எதிர்பார்ப்பார்களாயின் எவ்வாறான நிலைமை தோற்றம் பெறும் என்று சிந்திக்க வேண்டும். அரசாங்கம் முயற்சிக்குமாயின் ஒரு மாத காலத்திற்குள் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியும்.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமா இல்லையா என்பதிலேயே அமைச்சுப்பதவிகளை ஏற்பதா இல்லையா என்ற விடயம் அடங்கியுள்ளது என்றார்.