அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தந்திரமான ஆட்சியாளர்கள் கையாளும் ஒரு தந்திரமான உபாயமே இந்த சர்வகட்சி மாநாடாகும்.
இந்த சர்வகட்சி மாநாடானது ஒரு அர்த்தமற்ற விடயமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
பண்டாரகமவில் செவ்வாய்க்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அரசியல் கட்சிகள் உட்பட விடயத்துடன் தொடர்புடையசகல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள அழைப்புகளை விடுத்து வருகிறார்.
குழுக்களை அமைப்பது மூலம் பிரச்சினைகள் தவிர்ப்பதை போன்று அந்த குழுக்களில் மிகவும் மோசமான பகுதி தான் இந்த பாகுபாடான குழுவாகும்.
13 ஆவது திருத்தச் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் போலியானவை. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவரால் வழங்கப்படும் உறுதிமொழிகள் அர்த்தமற்றவை. பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள்.
தேர்தலை பிற்போட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காமல், நாட்டின் உண்மையான பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை மறைக்கும் போர்வையில் மேற்கொள்ளப்படும் உபாயமே இந்த சர்வகட்சி மாநாடாகும்.
தந்திரமான ஆட்சியாளர்கள் கையாளும் தந்திரமான உபாயமே இந்த சர்வகட்சி மாநாடாகும். இந்த சர்வகட்சி மாநாடானது ஒரு அர்த்தமற்ற தந்திர உபாயமாகும் என்றார்.