அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு விடுத்துள்ள அழைப்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் மற்றும் சமூக சமூக கட்டமைப்பில் ஏற்படுத்திய தாக்கம் தற்போது ஒப்பீட்டளவில் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகிறது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முறையான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள்,நிபுணர் குழுக்கள்,சிவில் அமைப்புக்கள் ஆகிய சகல தரப்பினரையும் ஒன்றினைத்து சிறந்த கொள்கை திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என பெரும்பாலான மக்கள் வலியுறுத்துகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அரசாங்கத்தினதும்,மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும்.
அதற்கமைய தேசிய பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மற்றும் பாராளுமன்ற கண்காணிப்பு குழுக்கள் ஆகியவற்றை மீண்டும் அமுல்படுத்த சகல தரப்பினருடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன்.ஆகவே கட்சிகளின் இணக்கப்பாட்டை வெகுவிரைவில் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.