இன்றைய திகதியில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஆண்டுதோறும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பின்னர் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வதுடன், அவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையையும் உறுதியாக பின்பற்றினால் ரத்த சர்க்கரையின் அளவை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ இயலும்.
சக்கரை நோயாளிகளுக்கான உணவு முறை என்பது ‘R R R ‘என்ற உணவு முறையாகும். உடனே எம்மில் பலர் இந்த பெயரில் அண்மையில் திரைப்படம் ஒன்று வெளியானதே என்பர்.
ஆனால் திரைப்படத்திற்கும், இதற்கும் பெயரில் மட்டுமே ஒற்றுமையை தவிர, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறை முற்றிலும் வேறானது. அதாவது ‘Reduce Replace Restriction’.
1.ரெடியூஸ்
உண்ணும் கார்போஹைட்ரேட் சத்தின் அளவை குறைத்தல் என பொருள். உதாரணமாக சர்க்கரை நோயாளிகள் நாளாந்தம் காலை மற்றும் இரவு வேளையில் ஆறு இட்லி அல்லது நான்கு தோசை சாப்பிட்டால் அதன் அளவை நான்கு இட்லியாகவும், மூன்று தோசையாகவும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
அதாவது சாப்பிடும் கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவின் அளவை குறைத்துக்கொள்வது என பொருள் கொள்ள வேண்டும்.
2.ரீப்ளேஸ்
குறைத்துக் கொண்ட கார்போஹைட்ரேட் சத்தின் அளவிற்கு பதிலாக நார் சத்து அடங்கிய உணவுப் பொருளை சாப்பிட வேண்டும்.
பழங்கள், தானியங்கள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதனை சாப்பிட வேண்டும். அதாவது ஒரு வேலை பழங்கள் மற்றும் சிறுதானியங்கள் ஆகியவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
3.ரெஸ்றிக்சன்
முற்றாகத் தவிர்த்தல். மைதாவால் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும், பக்கரி ஐட்டங்களையும் முழுமையாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்த சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கும் காரணிகள். இந்த மூன்று ‘ஆர்’ களை, உணவு முறையாக உறுதியுடன் கடைப்பிடித்தால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
டொக்டர் ராஜேஷ்
(தொகுப்பு அனுஷா)
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]