ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படம் வருகிற 6ந் தேதி வெளிவருகிறது. இந்த கதை என்னுடையது என்று துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் கூறினார். சர்கார் கதை வருண் ராஜேந்திரன் கதைதான் என்பதை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்தது. இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் “சர்கார் கதை நாங்கள் உருவாக்கியதுதான்” என்று படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான ஜெயமோகன் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் ஒரு கதை சொன்னார். அந்த கதை மொத்தமே 3 வரி கதைதான். “சிவாஜி கணேசன் ஓட்டையே கள்ள ஓட்டா போட்டுட்டாங்க. அவர் ஓட்டையே கள்ள ஓட்டாக போட முடியும் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம். இதை ஒரு கதையாக்கணும்” என்றார்.
அதைத் தொடர்ந்து 42 நாட்கள் வரை வடபழனியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து, ஒவ்வொரு காட்சியாக டெவலப் செய்து இந்த கதையை உருவாக்கினோம். இந்த கதையை முருகதாஸ், அவருடைய உதவி இயக்குனர் நான்கு பேர் ஆகியோருடன் நானும் சேர்ந்து உருவாக்கினோம்.
ஹீரோவோட ஓட்டை கள்ள ஓட்டு போட்டுட்டாங்க. அதற்கு பிறகு ஹீரோ என்ன செய்வார். விஜய் என்ன செய்வார், இப்படி செய்வாரா அப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்து உருவாக்கிய கதை. கடந்த 2 வருடத்தில் நடந்த அரசியல் சம்பவங்களை உள்ளே கொண்டு வந்து இந்த கதையை முடித்தோம். என்றார் ஜெயமோகன்.