தற்போதைய சூழலில் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவுக்கு 17 ஆயிரம் ரூபா போதுமானதா என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள் விடுதலை முன்னணி, விலைக் குறைப்புக்களை மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கலந்துகொண்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
அடிப்படைத் தேவைகள் அனைத்தினதும் விலை அதிகரித்துள்ளது. அன்றாட வாழ்க்கையை குறைந்த பணத்தில் அனுபவிக்கும் அதிகமான மக்கள் துன்பப்படுகின்றனர். விலை உயர்வைக் குறைக்காது தேங்காய்களுக்கு நிறம் பூசும் வேலைடய அரசு முன்னெடுத்து வருகின்றது. கடந்த ஆண்டுடன் பொருள்களின் விலையை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அத்தியவசியப் பொருள்களின் விலை 36 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் அதிகார சபையின் கணக்கீட்டின் படி நான்குபேர் கொண்ட குடும்பத்துக்கு மாதமொன்றுக்கு 43 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது என்றும், கொழும்பில் நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பத்தின் மாதாந்தச் செலவாக 60 ஆயிரத்து 364 ரூபா செலவாவதாகவும் சுட்டிக்காட்டி யுள்ளது. அமைச்சர் எஸ்.பி.திசாநாயக, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு மாதாந்தம் 14 ஆயிரத்து 196 ரூபா செலவாவதாகவும் கொழும்பில் நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பத்துக்கு 17 ஆயிரத்து 308 ரூபா செலவாவதாக கூறுகின்றார். இந்தக் கணக்கெடுப்புத் தவறான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசும் முன்னைய ஆட்சியைப் போலவே செயற்பட்டு வருகின்றது. இந்த அரசு தூரநோக்குடன் செயற்படவேண்டும். வளங்களை விற்பதன் மூலமும், விலை அதிகரிப்பின் மூலமும் அரசைப் பலப்படுத்தி கொள்வதன் மூலமும் வரிகளின் மூலமாக மக்களின் பணத் தைச் சுரண்டவுமே கவனம் செலுத்தி வருகின்றது.
எதிர்வரும் சில ஆண்டுகளில் இலங்கையில் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடும். சாதாரண மக்களின் மூலமாக இந்த நிலமை உருவாகவில்லை. வெள்ளை உடைகளை அணிந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் உள்ளவர்களே இதற்குக் காரணம். அவர்களே இந்த நாட்டை நாசமாக்கியுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பில்லாது போகும் நிலமை ஏற்பட்டு வருகின்றது.
அரசு தெளிவான பொருளாதார கொள்கையைக் கூறவேண்டும். விலைக் குறைப்புக்களைச் செய்ய வேண்டும். தேசிய உற்பத்திகளை அதிகரிக்கவேண்டும். உள்நாட்டு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இல்லையேல் நாட்டில் மக்கள் புரட்சி வெடிப்பதை தடுக்க முடியாது -– என்றார்.