இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக அமைச்சர் சரத் பொன்சேகா உண்மையை வெளிப்படுத்துவாராக இருந்தால் அவருடன் இணைந்து செயற்படப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருமான இராசவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியொன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய, யுத்த காலத்தில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் சாட்சி வழங்குவதற்கு அவர் முன்வந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருடன் இணைந்து செயற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை கிடைக்கவேண்டும். இதற்காக சரத் பொன்சேகா உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் போர்க் குற்றச்சாட்டு குறித்து ஹைட்பிரிட் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிபதிகளின் முன்னிலையிலேயே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 2010ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து சனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிட்டிருந்தபோது இரா சம்மந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவருக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.