சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 8 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஒரு போட்டியிலும் வெற்றிபெறாமல் இருக்கும் பொலிஸ் கழகம் தனது முதலாவது வெற்றியை சுவைக்கும் குறிக்கோளுடன் மொரகஸ்முல்லை கழகத்தை இன்று எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பொலிஸ் கழகம் கடந்த வாரம் வரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ளதுடன் மற்றைய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
14 கழகங்கள் பங்குபற்றும் சம்பியன்ஸ் லீக் போட்டியில் 2 புள்ளிகளுடன் தற்போது 13ஆவது இடத்தில் இருக்கும் பொலிஸ் கழகம் இன்றைய போட்டியில் வெற்றிபெறவேண்டுமானால் தடுத்தாடுவதிலும் எதிர்த்தாடுவதிலும் முழு அளவிலான ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிவரும்.
மறுபுறத்தில் 6 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் இருக்கும் மொரகஸ்முல்லை கழகம் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று அணிகள் நிலையில் முன்னேறுவதற்கு முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்பர் சன் – நியூ ஸ்டார்
பேருவளை சுப்பர் சன் கழகத்துக்கும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான போட்டி காலி விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
இரண்டு அணிகளும் இதுவரை மாறுபாடான பெறுபேறுகளை ஈட்டியுள்ளதுடன் இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்பர் சன் கழகம் 7 போட்டிகளில் 10 புள்ளிகளை ஈட்டி அணிகள் நிலையில் 8ஆவது இடத்திலும் நியூ ஸ்டார் கழகம் 8 போட்டிகளில் 9 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 10ஆவது இடத்திலும் இருக்கின்றன.
இது இவ்வாறிருக்க, சென் மேரிஸ் கழகத்திற்கு எதிராக சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் சுப்பர் சன் கழகம் தாக்கல் செய்த ஆட்சேபனைக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பது வியப்பை தருகிறது.
இந்த ஆட்சேபனை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவினர் போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஒன்று கூட முடியாதுள்ளதாக சம்மேளனம் பல வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் எத்தனையோ கூட்டங்களை இணைவழியில் நடத்திய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த விசாரணையை மாத்திரம் இழுத்தடிப்பு செய்வது வியப்பை தருவதாக கால்பந்தாட்ட விமர்சர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து சம்மேளனம் மேலும் தாமதியாமல் விசாரணைகளை உடனடியாக நடத்தி நியாயமான தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்படுகிறது.
பெலிக்கன்ஸ் எதிர் சொலிட்
குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்துக்கும் அநுராதபுரம் சொலிட் கழகத்துக்கும் இடையிலான போட்டி குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
அப் போட்டியில் பெலிக்கன்ஸ் கழகம் தனது சொந்த மைதான அனுகூலத்தைப் பயன்படுத்தி இலகுவான வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.