சம்பவத்திற்கு முதல்நாள் வித்தியாவை கடத்த திட்டமிட்டிருந்தனர்!- சிஐடியினர்
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர் கடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக இவ் வழக்கை விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொண்ட போதே குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது மன்றில் மாணவியின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சுகாஸ், கடந்த இரு வழக்கு தவணைகளுக்கு முன்னர் மன்றில் குற்றப்புலனாய்வு பிரிவால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மரபணு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தார்.
இதன்போது நீதிவான் குறித்த வழக்கு தொடர்பாக முழுமையாக பரிசீலித்து பார்த்தும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை யும் முழுமையாக பரிசீலித்தே இது தொடர்பாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஏனெனில் இவ் வழக்கு தொடர்பான பூரணமான விசாரணைகள் முடிவுறாத நிலையில் அவை தொடர்பில் விசாரணை முழுமை பெற்ற பின்னரே அது தொடர்பாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
குறித்த சட்டத்தரணி சுவிஸ்குமார் தப்பிச்சென்றமை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பிலும் நீதிவானிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிவான் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர் கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்திருந்ததோடு இது தொடர்பிலும் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களில் ஒருவர் தம்மை எவ்வாறு வேண்டுமானாலும் விசாரணை செய்யுங்கள். எங்களுக்கு பிணை வழங்காது நீங்கள் நீதியான விசாரணையை மேற்கொள்ளுங்கள். ஆனால் எங்களது குடும்ப உறுப்பினர்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என கோரியிருந்தனர்.
அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் என்னை கைது செய்யும் போது என்னிடம் இருந்து பெற்றுக்கொண்ட எனது பேர்சையும் தொலைபேசியையும் பொலிஸார் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. அது எங்கே என என்னிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கேட்கிறார்கள்.
மேலும் குறித்த மாணவி நடந்த சம்பவம் எனது சகோதரிக்கு நடந்த சம்பவம் போன்று இதற்கு நீதியான விசாரணை அவசியமெனவும் உண்மையான குற்றவாளிகள் இனங்காணப்பட வேண்டும் எனவும் அவ்வாறு பொலிஸார் செய்யாது விட்டால் நான் விடுதலையாகி வந்து அவனை கண்டுபிடிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த நீதிவான் குறித்த சந்தேகநபரது உறவினர்கள் சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அவ் வழக்கு தவணையின் போது சட்டத்தரணி ஊடாக அது தொடர்பான விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இவ் வழக்கு விசாரணையை இம் மாதம் 29ம் திகதிவரை ஒத்திவைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.