எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தனை பலப்படுத்துவதன் மூலமே அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்க முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் இன்றைய தேர்தல் தொடர்பிலும் சர்வதேசமும் இலங்கையும் பார்த்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில் நாங்கள் ஒற்றுமையினை வெளிப்படுத்தவேண்டிய மிகவும் முக்கியமான காலத்தில் இருக்கின்றோம். தமிழ் மக்களின் ஆணை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே உள்ளது என்பதை வெளிப்படுத்தவேண்டிய மிக முக்கியத்துவமான காலமாகும்.
வடக்கு-கிழக்கில் உள்ள தமிழர்களுக்குரிய உள்ளூராட்சி சபைகளை இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயற்படும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் எதிர்க்கட்சிகளில் இருந்து தமது பகுதிகளுக்கு என்ன அபிவிருத்தியை செய்யமுடியும் என்பதை சிந்திக்கவேண்டும்.
காலம் காலமாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மைத்திரி-சம்பந்தன் ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் குறுகிய காலமே நாடாளுமன்ற ஆட்சிக்காலம் இருக்கின்றது. இந்த காலத்திற்குள் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வுத்திட்டம் பெறப்படவேண்டும். அதற்கு சம்பந்தன் ஐயாவின் கரங்களை பலப்படுத்தவேண்டும். தேசிய கட்சிகளில் உள்ள எமது உறவுகள் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் வந்து இணைய வேண்டும்.
மாற்று அரசியல் நிகழ்ச்சி நிரலில் உள்ளவர்கள் இன்றைய நிலையினை உணர்ந்து செயற்படவேண்டும். அற்பவிடயங்களுக்கு பிரிந்து நிற்காமல் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒன்றிணைய வேண்டும்” என கூறினார்.