சம்பந்தனின் இலக்குகளை அடைவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உறுதிபூண்டு செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (07) நடைபெற்ற மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களினதும் நாட்டினனும் முக்கியமான தலைவராக இருக்கும் சம்பந்தனின் மறைவால் நாம் கவலை அடைகின்றோம். தனிப்பட்ட முறையில் அவருடைய மறைவானது எனக்கு ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. அவரை எனக்கு 17 ஆண்டுகளாக நன்கு தெரியும்.
இந்தியாவில் இருந்து சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சர்கள் இலங்கைக்கு வருகை தரும்போது சம்பந்தனை சந்திக்காது அவர்கள் செல்வது கிடையாது. அந்தளவுக்கு அவருடைய முக்கியத்துவம் காணப்படுகிறது.
நாங்கள் எப்போதும் அவருடைய கரிசனைகள் மற்றும் ஆலோசனைகளை செவிமடுத்தே வருகின்றோம். அவர் அரசியல் தீர்வு விடயத்தில் எவ்வளவு தூரம் இறுக்கமாக இருந்தாரோ அதேபோன்று தான் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களிலும் தீவிரமான ஆர்வத்தினைக் காண்பித்தார்.
அவர் வடக்கு, கிழக்குக்கு உட்பட்ட தலைவராக அல்லாது முழு இலங்கைக்கும் அவரது அறிவுரைகளை வழங்கியவராக இருந்தார். அத்துடன் அவருடைய வெற்றிடத்தினை நிரப்புவது மிகவும் கடினமாகும்.
எனினும் அவரது இட்சியங்களை அடைவதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று இன்றைய தினத்தில் உறுதி எடுப்பதோடு அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.