இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பின் அளித்த ஒரு அரிதான பேட்டியில், ‘பொறுப்பற்ற’ சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு எதிராக பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தகைய செயல்கள் கடினமான விவகாரங்கள் குறித்த மக்களின் புரிதலைச் சிதைப்பதுடன், தவறான தகவல்களையும் பரப்புவதாக அவர் கூறியுள்ளார்.
அவருக்குப் பிறகு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட்டு டிரம்ப் ட்விட்டர்-ஐ பரவலாகப் பயன்படுத்துபவர். ஆனால், அவர் குறித்து ஒபாமா எதுவும் கூறவில்லை.
பிபிசி ரேடியோ 4-இன் ‘டுடே’ நிகழ்ச்சிக்காக பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் செய்திகளை சமூக வலைத்தளங்கள் சிதைப்பதாக எச்சரிக்கை விடுத்த ஒபாமா, அதிகாரத்தில் இருப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பதிவிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
உண்மைகளைப் புறந்தள்ளிவிட்டு, தங்கள் சொந்த கருத்துகளை வலுப்படுத்தும் விடயங்களையே மக்கள் வாசிக்கவும், கவனிக்கவும் செய்வார்கள் என்று எதிர்காலம் குறித்து ஒபாமா கவலை தெரிவித்தார்.
“சமூகத்தைப் பிளவுபடுத்தாமல், அனைவரும் ஒப்புக்கொள்ளும் புள்ளியில், பல்வேறு கருத்துகளைக் கொண்ட குரல்களை எழுப்பவும், பன்முகத்தன்மை நிறைந்த பார்வைகளை வெளிப்படுத்தவும் தொழில்நுட்பத்தை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதுதான் இப்போதைய கேள்வி,” என்று அப்பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள அவரை அனுமதிக்கும்போதிலும், ட்விட்டர் சமூகவலைத்தளத்தை அதீதமாகப் பயன்படுத்துவதாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைத்த சமயம் பற்றி அந்நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, “எல்லா வேலைகளும் இன்னும் முடிக்கப்படாமல் இருந்ததால்,” தமக்கு கலவையான உணர்வுகளே இருந்ததாகத் தெரிவித்தார்.
“நாடு (அமெரிக்கா) செல்லும் விதம் குறித்து கவலை உள்ளது. எனினும், ஒட்டுமொத்தமாக ஒரு அமைதி உள்ளது,” என்று அவர் கூறினார்.