முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட ஊடக அறிக்கை போல், போலியான ஆவணம் ஒன்றைத் தயாரித்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இனந்தெரியாத சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த போலியான அறிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் அறிவிக்கவில்லை என இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்லும் வரை காத்திருந்து, சிலர் இந்தப் போலி ஆவணத்தை வெளியிட்டுள்ளதாகவும் ரொஹன் வெலிவிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான போலி ஆவணமானது ´2020 ஜனாதிபதித் தேர்தல்´ என்ற தலைப்பில் வெளியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், 2019 ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதை, மஹிந்த ராஜபக்ஷ முதலில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்ததாகவும் ரொஹான் வெலிவிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.