“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டித் தீர்வினை வழங்க அரசாங்கம் இணங்க வேண்டும். இல்லையென்றால், பிரிந்து வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் மற்றும் பொதுமக்களின் 34வது தியாகிகள் நிகழ்வு மட்டகளப்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசாங்கம் இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வை தர மறுக்குமாயிருந்தால், தமிழர்களுக்கு பிரிந்து வாழும் சந்தர்பத்தை தரவேண்டும் என சர்வதேசத்திடம் நியாயம் கேட்க நாங்கள் தயார்.
வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதோடு சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது கொள்கை. கிழக்கு மாகாணமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு வித்திட்டது.
வடக்கு, கிழக்கில் இரத்தம் சிந்திய இளைஞர்களுடைய வீரம் இன்று கொச்சைப்படுத்தப்படுகின்றது. ஆயுதப் போராட்டத்திலும், அகிம்சை போராட்டத்திலும் தமிழர்கள் உச்சக்கட்டத்தை அடைந்த போதிலும், தமிழினத்திற்குள் ஒரு சில எட்டப்பன்கள் இருந்ததால் அவற்றை சாத்தியமாக்க முடியவில்லை.
ஆயுதப் போராட்டத்தின் பலம் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வை வென்றெடுப்பதற்காக கூட்டமைப்பு பிளவுப்பட கூடாது.” என்றுள்ளார்.