வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திட அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ராணுவ தளத்தை தாக்க குறி வைத்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனைகள் நடத்தப்படுவதாக சர்வதேச போர்க் கலை நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனால் கடுப்படைந்த அமெரிக்கா, சமீபத்தில் வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனாலும் வடகொரியா அஞ்சாமல் தனது போக்கில் சென்றுகொண்டுள்ளது. இந்நிலையில், வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியாவுடன் விரைவில் சமரசம் பேசவும் தயாராக உள்ளோம் வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ஆட்சி கவிழ வேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை. கொரிய தீபகற்ப பகுதியை ஒன்றிணைக்கவோ, அதற்காக எங்கள் ராணுவத்தை அனுப்பவோ நாங்கள் எண்ணவில்லை. வடகொரியாவுக்கு நாங்கள் எதிரியல்ல, ஆனால், எங்களை வடகொரியா மிரட்டி வருவதை நாங்கள் ஏற்றுகொள்ள முடியாது. இதை அவர்கள் ஒருகாலகட்டத்தில் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அப்போது அவர்களுடன் அமர்ந்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் ” என்று ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்