இரண்டாவது தொடர்ச்சியான நாளாக குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிகொண்டது.
சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற இப் போட்டியில் ரவிந்த்ர ஜடேஜா, இலங்கை வீரர்களான மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுக்கள், டெவன் கொன்வேயின் அதிரடி அரைச் சதம் என்பன சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றியை இலகுவாக்கின.
வேகப்பந்து வீச்சாளர்களில் குறிப்பாக மதீஷ பத்திரண மிக சிறப்பாக பந்துவீசியாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம். எஸ். தோனியும் மஹீஷ் தீக்ஷன தனது ஆற்றலை நுட்பத் திறனுடன் வெளிப்படுத்துவதாக பயிற்றுநர் ஸ்டீவன் ப்ளெமிங்கும் போட்டி முடிவில் பாராட்டினர்.
பெரும் சிரமத்திற்கு மத்தியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எவரும் பிரகாசிக்கவில்லை.
அபிஷேக் ஷர்மா (36), ராகுல் திரிபதி (21) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
சுப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மஹீஷ் தீக்ஷன 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அவர்கள் மூவரும் தங்களது 4 ஓவர்களையும் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் நிதானத்துடன் அதேவேளை அவசியமான வேளைகளில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
டெவன் கொன்வே 57 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ருத்துராஜ் கய்க்வாட் 35 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டில் 11 ஓவர்களில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்ததன் பலனாக சென்னை சுப்பர் கிங்ஸ் இலகுவாக வெற்றிபெற்றது.
பந்துவீச்சில் மயான்க் மார்க்கண்டே 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.