சனி பகவான் டிசம்பர் 19, மார்கழி 4 செவ்வாய் காலை 9.28 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியை 12 ராசிக்காரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். 12 ராசிக்காரர்களுக்கும் பலவித நன்மை, தீமைகள் கலந்த பலன்களே கூறப்பட்டாலும் சனி பகவானின் பார்வை படும் இடத்தைப் பொறுத்து யாருக்கு இடமாற்றம், புதிய வேலை கிடைக்கும், வெளிநாட்டு யோகம் அமையும் என்பதை பார்க்கலாம். இந்த பலன்கள் பொது பலன்கள்தான். ராசிக்காரர்களுக்கு நடைபெறும் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
மேஷ ராசிக்காரர்களே…
இதுநாள்வரை அஷ்டமத்தில் இருந்த சனி பகவான் 9வது இடமான பாக்யதானத்திற்கு செல்கிறார். பகை கிரகமாக செவ்வாய் வீட்டில் இருந்தார். உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திற்கு வருகிறார். அல்லல்பட்ட நீங்கள் இனி நல்லது நடப்பதை காண்பீர்கள். மாணவர்களுக்கு 9 ஆம் இடத்து சனியால் உயர்கல்வி யோகம் தரும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல யோகம் கிடைக்கும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 3 இடம், 6வது இடம், 11வது இடத்தை பார்க்கிறார். உங்களுடைய லாப ஸ்தானத்தை 3வது பார்வையாக சனி பார்க்கிறார். மூத்த சகோதரர்கள் ஆறுதலாக இருப்பார்கள். சனிக்கிழமைகளில் செய்யும் காரியம் வெற்றி கிட்டும். மேஷ ராசிக்கு 7வது பார்வையாக 3வது ஸ்தானத்தை பார்க்கிறார். புதிய வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை தருவார். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 10வது பார்வையாக 6வது இடத்தை பார்க்கிறார். சுயமாக வேலை கிடைக்கும். நாட்டின் சூழலில் மாற்றம் இருக்கும்.மேஷ ராசி அரசியல்வாதிகளுக்கு மாற்றம் வரும். பணி புரியும் இடங்களில் பாராட்டு கிடைக்கும். புயல் விலகி இனி தென்றல் வீசப்போகிறது.
நல்லதே நடக்கும்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் யோகாதிபதி. ரோக ஸ்தானத்தில் இருந்து 7வது இடமாக கண்டகச்சனியாக இடம் பெயர்கிறார். மிதுனராசிக்காரர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். யோகாதிபதியாக இருப்பதால் நல்லதே நடக்கும். சனி பகவான் 3வது பார்வையாக பாக்ய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தையின் உடல் நலனின் கவனம் தேவை. சமூகத்தில் பெயர், புகழ் வந்து சேரும். சனிபகவானின் பார்வை 7வது பார்வையாக உங்களின் ஜென்ம ராசியை பார்க்கிறார். உழைப்பு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.10வது பார்வையாக உங்கள் ராசிக்கு 4வது இடத்தை பார்ப்பதால் சொத்துக்கள், வாகனங்களை வாங்குவீர்கள். பிரச்சினைகள் விலகி ஓடும். 7ல் சனி வந்தால் மரணம் என்று கூறுவார்கள். 6க்குடையவரின் திசை நடந்தால் மட்டுமே மரணம். எனவே எல்லாரும் கவலைப்பட வேண்டாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே வாழ்க்கை துணையுடன் ஆலோசித்தே செய்யுங்கள். வெளிநாட்டு பயணம் ஏற்படும். எனவே கண்டகச்சனியின் பாதிப்பில் இருந்து தப்பலாம். கல்வி முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். செய்யும் தொழிலில் வளர்ச்சி காத்திருக்கிறது. வெற்றிகள் தேடி வரும்.
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
கடகம்
சனிபகவான் உங்களின் 5 வது இடத்தில் இருந்து ராசிக்கு 6வது ராசிக்கு இடம் பெயர்கிறார். அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும். அச்சம் வேண்டாம். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஜென்ம ராகுவினால் நன்மை கிடைக்கும். 6வது இடத்திற்கு வரும் சனியால் சத்ருகள் விலகி ஓடுவார்கள். வியாதிகள் நீங்கும். மாபெரும் வெற்றிகள் கிடைக்கும். கடன் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டாம். வீடுகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வெளியூர்களுக்கு செல்லும் நிலை ஏற்படும். சனிபகவான் 3வது பார்வையாக ராசிக்கு 8வது இடத்தை பார்ப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. 7வது பார்வையாக ராசிக்கு 12வது ஸ்தானத்தை பார்க்கிறார் எனவே பலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும். உறக்கம் கெடும், சுகம் கெடும். வேலைகளை மாற்றி அமைப்பது அவசியம்.
பிரச்சினைகள் தீரும்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்த பிரச்சினை தீரும். காரணம் 4வது இடத்தில் அர்த்தாஸ்டம சனியாக இருந்தவர் 5வது இடத்திற்கு வருகிறார். இதுநாள்வரை சிரமத்தில் இருந்தவர்கள் விடுதலை பெறுகிறார்கள். நோய் நொடிகள் பிரச்சினைகள் தீரும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அல்லல்பட்டவர்களுக்கு வியாதிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் நாட்டம் குறையும். குழந்தைகளை கண்காணியுங்கள் புதியதாக வீடு வாகனம் வாங்க ஏற்படும். சிம்ம ராசிக்காரர்களுக்கு தனவரவை தரும் காரணம் உங்களின் லாப ஸ்தானத்தை 11வது இடத்தை 7வது பார்வையாக சனிபகவான் பார்க்கிறார். சனிபகவான் 2வது இடத்தை தன ஸ்தானத்தை பார்க்கிறார். மூத்தவர்களிடம் ஆலோசனை பெறலாம். குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரவும், அதே போல செலவும் ஏற்படும். சிக்கனம் அவசியம் சிம்மராசிக்காரர்களே.
எல்லாம் இன்பமயம்
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். இனி எல்லாம் இன்ப மயம்தான். சனி பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். ராசிக்கு 3வது இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். பலர் வேறு ஊருக்கு படிப்புக்காக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சனிபகவான் தனது 3வது பார்வையாக உங்களின் 5வது இடத்தை பார்க்கிறார். 9வது இடத்தை பார்க்கிறார். பித்ருகளின் ஆசி கிடைக்கும். தந்தையினாலும் நன்மைகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். கலைகள் பயின்று ஜெயிப்பீர்கள். குழந்தைகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான உயர்படிப்புகளை படிப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். பகைவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.
எல்லாம் நன்மைக்கே
மகரம்
சனிபகவான் 12வது இடத்தில் விரைய சனியாக அமைகிறார். ஏழரை சனி ஆரம்பிக்கிறது. பயம் வேண்டாம். 12வது இடம் அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. ஏழரை என்றாலும் சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார்.பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். எனவே நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். எனவே மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். பாக்கிய ஸ்தானத்தை 10வது பார்வையாக பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும்.
கும்பத்திற்கு குதூகலம்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை கரும சனியாக இருந்தவர் லாப சனியாக இடப்பெயர்ச்சி அடைகிறார். ராசிக்கு 10வது இடத்தில் இருந்த போது பல பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி எல்லாம் லாபமாகவே இருக்கும். லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் இனி நன்மையே நிகழும். கும்பராசியின் அதிபதி சனிபகவான். உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி அமர்வதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிட்டும். பண வரவு அதிகரிக்கும். குரு ஏற்கனவே ராசியை 5வது பார்வையாக பார்க்கிறார். சனிபகவான் 3வதுபார்வையாக பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். 7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே புத்திரர்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். இல்லத்தரசிகளுக்கு உறவுகளிடத்தில் மதிப்பு கிடைக்கும். கும்ப ராசிக்கு சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். தான தர்மம் செய்யுங்கள். பகைவர்களிடத்திலும் அன்பு பாராட்டுங்கள். அட்டமஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. வெளிநாட்டு பயணம் அமைய வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் செழிப்பு ஏற்படும். இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. கும்ப ராசிக்காரர்களுக்கு குதூகலம் தரும் சனிப்பெயர்ச்சி என்றால் மிகையாகாதது.