லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு கொண்டு வந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு தேசிய மட்டத்திலான தர நிர்ணயத்தை கொண்டிருக்காத காரணத்தினால் எரிவாயு தொகையை மீண்டும் திருப்பியனுப்ப நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
எரிவாயு கசிவு உணர் திறனை தூண்டும் எதில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் எரிவாயுவில் 15 சதவீத அளவில் காணப்பட வேண்டும்.
நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 3,700 மெற்றிக்தொன் எரிவாயுவில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 15 சதவீத அளவிற்கு குறைவான மட்டத்தில் காணப்பட்டமை பரிசோதனை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவற்றை திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் நேற்று ஒரு தொகை எரிவாயுவை கப்பலில் கொண்டு வந்துள்ளது. இக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
உரிய தரமற்ற எரிவாயுவை தரையிறக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
தரமற்ற சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகித்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களுடன் தொடர்புடைய பிரதான இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக எதிர்வரும் வாரம் வழக்க தாக்கல் செய்யப்படவுள்ளது என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரால் (ஓய்வு) சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெறும் சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு முன்வைக்க ஜனாதிபதியால் கடந்த மாதம் 30 ஆம் திகதி நியமிக்கப்பட்ட குழுவினர் தமது பரிசோதனை அறிக்கையை ஜனாதிபதியிடம் இவ்வாரம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]