ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ‘இன்விடேஷனல்’ இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 2 போட்டிகளில் தினேஷ் சந்திமால் தலைமையிலான ரெட்ஸ் அணியும் தசுன் ஷானக்க தலைமையிலான கிறேஸ் அணியும் வெற்றியீட்டின.
இதில் கிறேஸ் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றியீட்டி இதுவரை தோல்வியடையாத அணியாக திகழ்கிறது.
கிரீன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிறேஸ் அணி டக் வேர்த் லூயிஸ் அடிப்படையில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
மழை காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதால் 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக திருத்தி அமைக்கப்பட்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிறேஸ் அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்ததால் போட்டியை நேர தாமதமின்றி நிறைவு செய்ய எற்பட்டதால் கிரீன் அணிக்கு 8 ஓவர்களுக்கு 111 ஓட்டங்கள் வெற்றி இலக்கு திருத்தி அமைக்கப்பட்டது.
எனினும், 5.3 ஓவர்களின்போது மீண்டும் மழை குறுக்கிடவே போட்டியை மீண்டும் ஆரம்பிக்க முடியாது போனது.
இதன்போது 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த கிரீன் அணி 4 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் தசுன் ஷானக்க 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 22 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசினார். இதுவே இத்தொடரில் அதிவேகமாக அடிக்கப்பட்ட அரைச்சதமாக விளங்குகிறது.
இப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற புளுஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரெட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புளுஸ் அணி 7 விக்கெட்டுகளை 146 ஓட்டங்களை பெற்றது.
வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரெட்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.